ராமநாதபுரம்: ராமநாதபுரம் திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயில் பகுதியை கடல் நெருங்கி வருவதால், தடுப்புச் சுவர் அமைக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி பகுதியில் சேதுக்கரை ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயில் உள்ள கடல் பகுதியில் தான் சேதுக்கரையில் இருந்து பாலம் துவங்கி தனுஷ்கோடி வரை உள்ளது. இலங்கையை இணைக்கும் விதமாக ஆஞ்சநேயரால் அமைக்கப்பட்டதாக பக்தர்கள் நம்பி வருகின்றனர். பாலம் அமைந்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன. தற்போது இது கடல் மட்டம் உயர்ந்து விட்டதால், தனுஷ்கோடி அழிந்த போது இந்த பாலம் கடலுக்குள் மூழ்கிவிட்டது.
தற்போது இந்த கடற்கரை பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் கடல் மட்டம் உயர்ந்து வருவதால்,கடலில் இருந்து 50 மீட்டருக்கு அப்பால் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் கோயில் வாசல் வரை கடல் நெருங்கிவிட்டது. விரைவில் கோயிலுக்குள் நுழையும் நிலை உள்ளது. கலெக்டர் நடராஜனிடம் பக்தர்கள் இந்த கடல் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அதிகாரிகள் ஆய்வு: கடல் பகுதியாக இருப்பதால், இந்தப்பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது குறித்து வனத்துறை, பொதுப்பணித்துறை, மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்ற குழு ஆய்வு செய்துள்ளது.