குடவாசல் சற்குணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: 30ம் தேதி கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2017 01:06
திருவாரூர்: கருவேலி என்னும் புண்ணிய ஸ்தலம் வடகிழக்கே திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம் கிழக்கில் புகழ்பெற்ற திருவீழிமிழலை, தெற்கே ஸ்ரீவாஞ்சியம், மேற்கே திருநரையூர் சித்தீச்சரம் ஆகிய ஸ்தலங்களின் மையமாக அமைந்துள்ளது திருவாரூர் மாவட்டம் குடவாசல் சற்குணேஸ்வரர் கோயில். இக்கோயிலில் வரும் 30ம் தேதி வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
கருவிலிக் கொட்டிட்டை என்று திருநாவுக்கரசரால் போற்றப்பட்ட பெருமையுடையதும், மூர்த்தி, தலம் தீர்த்தம் என்று மூன்றாலும் மகிமை பெற்றதும் இம்மை, மறுமை இரண்டிலும் உயர்வற உயர்நலன் அளிக்கும் திவ்ய தம்பதிகள் உறைகின்றதும். யமபயம் நீக்கும் யமதீர்த்தக் கரையில் அமைந்திருப்பதும் ஹரிச்ருதா எனப்படும். அரசலாற்றின் வடகரையில் அமைந்திருப்பதும் ஸற்குணேச்வரர் என்ற திருநாமத்துடன் அருள்புரியும் கயிலைநாதன் குடிக்கொண்டிருக்கும் திருத்தலம் ஸ்ரீஸற்குணேச்வரபுரம் இந்திரன் பூஜித்து பேறுபெற்ற தலம். ருத்ர கணங்கள் வழிபட்டு தேவத்தன்மை பெற்ற பாவம் நீக்கி புண்ணியம் பெருக்கும் தலம். இத்திருக்கோயிலை கருவேலி குழந்தை அய்யர் அவர்களின் வழித்தோன்றல்கள் அழகுற புதுப்பித்து திருப்பணி செய்தனர். எல்லா ஸந்நிதிகளும் சிறந்த முறையில் சீர்திருத்தப்பட்டு (27.03.1997)ல் முதல் கும்பாபிஷேகமும் 14.7.2008 ல் இரண்டாவது கும்பாபிஷேகமும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. தற்சமயம் மீண்டும் திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் சிறப்பாக முடிவுற்றுள்ளன.
வரும் ஆனி மாதம் 16 ஆம் தேதி (30.06.2017) வெள்ளிக்கிழமை உத்திர நக்ஷத்திரம், கன்னியா ராசி வ்யுதீபாதயோகம் கரஜைகரணம் கூடிய சுபயோக சுபதினத்தில் உத்தம பஞ்சகத்தில் காலை 9.15 க்கு மேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ஸர்வாங்க ஸுந்தரீ சமேத சற்குணேஸ்வர ஸ்வாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் திருவருள் துணை கொண்டும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்களின் பரிபூரண அனுக்கிரஹத்துடனும் சிறப்புற நடைபெற உள்ளது.