மற்ற செடிகளைப்போல் நாம் துளசிச் செடியை பார்க்கக் கூடாது. மஹா விஷ்ணுவின் பக்தைகளுக்குள் முதன்மையானவள் துளசி தேவி. மஹாவிஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானவளும் கூட ஆகவே தான். நாம் துளசியை வளர்த்து தினசரி பூஜை செய்து நமஸ்கரிக்கிறோம். இப்படி பூஜைக்கு உகந்த துளசியை மஹா விஷ்ணுவுக்கு மாலையாகச் சூட அல்லது அர்ச்சனை செய்ய செடியிலிருந்து நாம் பறிக்கிறோம். தவிர்க்க இயலாமல் நாம் செய்யும் இந்தச் செயலை சில வழிமுறைகளோடு செய்ய வேண்டும்.
ஹே.... துளசி தேவியே! விஷ்ணுவிடம் உன்னைச் சேர்ப்பதற்காக, அர்ச்சிப்பதற்காக உன்னை நான் பறிக்கிறேன். நான் செய்யும் இந்த ஹிம்ஸையை மன்னித்து விடு என்ற சுலோகம் சொல்லி, கைகூப்பி பிரார்த்தித்து அதன் பின்னரே துளசியை செடியிலிருந்து கிள்ள வேண்டும். மேலும் மதியம் 12 மணிக்குப் பிறகும், தூய்மை யற்ற சமயத்திலும் துளசியை பறிக்கக் கூடாது போன்ற நியமங்களும் இதற்கு உண்டு. இவற்றில் ஏகாதசியன்று பறிக்கக் கூடாது என்பது ஒன்று. விஷ்ணு பக்தர்களான அனைவரும். விஷ்ணுவுக்குப் பிரியமான ஏகாதசி திதியன்று சாப்பிடாமல் உபவாஸம் இருந்து விஷ்ணுவை தியானித்து பூஜிக்கிறார்கள் அல்லவா! அதைப்போலவே விஷ்ணு பக்தையான துளசியும் ஏகாதசியன்று விஷ்ணுவை தியானித்துக்கொண்டு இருக்கிறாள். ஆகவே, அன்று துளசியைப் பறித்தல் விஷ்ணு தியானத்துக்கு இடையூறாக அமையும். ஆகவே, ஏகாதசி, துவாதசி, அமாவாசை போன்ற நாட்களில் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.