பதிவு செய்த நாள்
13
ஜூன்
2017
01:06
திருப்பூர் : வைகாசி விசாக தேர்த்திருவிழாவையொட்டி, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில் நேற்று, மகா தரிசன வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 31ம் தேதி கிராமசாந்தி நிகழ்வுடன் துவங்கியது. கடந்த, 7ம் தேதி விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் 8ம் தேதி வீரராகப்பெருமாள் தேரோட்டமும் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்களும், சிவனடியார்களும் பக்தி பரவசத்துடன் தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுத்தனர்.கடந்த, 9ம் தேதி மாலை பரிவேட்டை நிகழ்ச்சியும், 10ம் தேதி மாலை தெப்பத்திருவிழாவும் நடைபெற்றது. தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று, மகா தரிசனம் நடைபெற்றது. விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நடராஜர், சிவகாமி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, தனித்தனி சப்பரங்களில் நடராஜரும், சிவகாமி அம்மனும், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீரராகவ பெருமாள், ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் மகா தரிசனம் செய்து, வழிபட்டனர். இன்று, விஸ்வேஸ்வரர் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 13ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.