பதிவு செய்த நாள்
15
நவ
2011
04:11
சபரிமலை யாத்திரைக்கு இருமுடி எடுத்துச் செல்பவர்களுக்கான குறிப்புகள்:
இருமுடிப்பையின் அளவு : அகலம் 1 1/4அடி. நீளம் 2 1/2 அடி. மையத்தில் 1 அடி அகலத்தில் வாய் இருக்க வேண்டும். இருபக்க ஓரங்களில் கயிறு இருக்க வேண்டும்.
சிறுபைகளின் அளவு: 1 அடி அகலமும் 1 1/4அடி நீளமும் கொண்டதாய் ஐந்து பைகள் இருக்க வேண்டும்.
முன்முடியில் வைத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள்: ஒரு பையில், வெற்றிலை, பாக்கு, காசு, நெய் தேங்காய் ஆகியவற்றை முதலில் வைக்க வேண்டும். பின், கற்பூரம், விபூதி, மஞ்சள் தூள்,சந்தனம், குங்குமம், பச்சரிசி, ஊதுபத்தி, அவல், பொரி, பன்னீர், தேன், கற்கண்டு, நல்லமிளகு, புகையிலை, ஜாக்கெட் துணி, காணிக்கை (அவர் அவர் விருப்பம் போல்) ஆகியவற்றை வைக்க வேண்டும். நெய் ஐயப்ப சுவாமியின் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். நெய் தேங்காயை உடைத்து நெய்யை அபிஷேகத்திற்கும், தேங்காயின் ஒரு மூடியை அங்கே எரியும் ஆழியிலும் சேர்த்து விட வேண்டும். ஒரு மூடியை பிரசாதமாகக் கருதி வீட்டுக்கு கொண்டு வரலாம். கற்கண்டை அதற்கான தனி உண்டியலில் போட்டு விடலாம். மாளிகைப்புறத்து அம்மனுக்கும், நாகருக்கும் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். கடுத்துவா சுவாமிக்கு (கடுத்த சுவாமி) அவல் பொரியும், வாவருக்கு நல்ல மிளகும், கருப்ப சுவாமிக்கு புகையிலையும் சமர்ப்பிக்க வேண்டும். காசை உண்டியிலில் போட்டு விடுங்கள். இருமுடியின் பின்பகுதியில் இரண்டு தேங்காய், பச்சரிசி வைத்துக் கொள்ளுங்கள். இதை ஏறுதேங்காய், இறங்கு தேங்காய் என்பர். ஒன்றை படி ஏறும் போதும், ஒன்றை வேறுபாதையில் இறங்கும் போதும் உடைப்பதுண்டு. கரிமலை மூர்த்திக்கும், விநாயகருக்கும் தேங்காய் உடைக்கும் பழக்கமும் உண்டு. இதற்குரிய காய்களை தனியாக ஜோல்னா பையில் வைத்துக் கொள்ளவும். இருமுடியை தலையில் வைக்கும் முன் ஒரு சால்வையை தலையில் போட்டு அதன்மேல் முடியை தூக்கி வைக்கவும்.
முத்திரை தேங்காய் பாடல்: ஒவ்வொரு நபராக ஸ்வாமியின் முன் அமர்ந்து குருஸ்வாமியின் உதவியுடன் ஒவ்வொரு முத்திரையிலும்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
நெய்யபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
பால் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம் ஸ்வாமி சரணம்
தேவன் சரணம் தேவி சரணம்
இருமுடிக்கட்டு சபரிமலைக்கு
சபரிமலைக்கு இருமுடிக்கட்டு
யாருடகட்டு ஸ்வாமியுடகட்டு
யாரைக்காண ஸ்வாமியைக் காண
நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே
பாலபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூரதீபம் ஸ்வாமிக்கே
காணிப்பொன்னும் ஸ்வாமிக்கே
ஸ்வாமியே ஐயப்பா - என்று சரணம் சொல்லி முத்திரையில் நெய்யினை நிறைக்க வேண்டும்.
வழி தேவைக்கு...
வழிதேவைக்கு ஜோல்னா பையில் மறக்காமல் எடுத்து செல்ல வேண்டியவை: பேட்டரி லைட், டூத் பேஸ்ட், பிரஷ், திருநீறு, சந்தனம், குங்குமம், மாற்றுவேஷ்டி, கற்பூரம், சாம்பிராணி, மெழுகுவர்த்தி, சட்டை, துண்டு, மழைக்காக பிளாஸ்டிக் பேப்பர், சின்னகத்தி, டம்ளர், தண்ணீர் பாட்டில், ஸ்வெட்டர், மப்ளர், தீப்பெட்டி, திருவிளக்கு, திரிநூல், நெய். இருமுடி தாங்கி செல்லும்போதும், வழியில் உபயோகிக்கவும் ஒரு கம்பளம் ஒரு விரிப்பு அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.