பதிவு செய்த நாள்
16
ஜூன்
2017
12:06
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், வெட்டி வேர் சப்பர உற்சவத்துடன், நேற்று நிறைவு பெற்றது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு, வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பெருமாள் பவனி வந்தார். இந்த உற்சவத்தில் முக்கியமான விழாவான மூன்றாம் நாள் கருட சேவையும், ஏழாம் நாள் தேர் திருவிழாவும் வெகு விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதையடுத்து, நேற்று மதியம், கோவில் கண்ணாடி அறையில் ஆராதனம் நடைபெற்றது. இரவு, 7:00 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி, சின்ன காஞ்சி புரம் பகுதி முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு பெருமாள் கோவிலை சென்றடைந்ததும், 10:00 மணிக்கு, பிரம்மோற்சவம் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.