பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
12:06
முகப்பேர் : முகப்பேர் சந்தான சீனிவாசப் பெருமாள் கோவில், முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா, கொடி ஏற்றத்துடன் நேற்று துவங்கியது. முகப்பேர், வெள்ளாளர் தெருவில், சந்தான சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் முதலாம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா, கொடியேற்றத்துடன், நேற்று துவங்கியது.அதை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. காலை, 6:00 மணிக்கு, கேடயம் துவஜாரோகணம் எனும் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு, 7:00 மணிக்கு, சிம்ம வாகனம், யோக நரசிம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.இந்த உற்சவத்தின் மூன்றாம் நாளான, நாளை காலை, 6:00 மணிக்கு கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் அனுமந்த வாகன, சேஷ வாகன புறப்பாடு, பல்லக்கு, நாச்சியார் திருக்கோலம், யாளி மற்றும் யானை வாகன புறப்பாடு நடக்கிறது.
ஏழாம் நாள் விழாவான, ஜூன், 25 காலை, 7:00 மணிக்கு, தோளுக்கினியான் புறப்பாடு நடக்கிறது. ஜூன், 27ல், பல்லக்கு ஏகாந்த சேவை, தீர்த்தவாரி, புஷ்ப பல்லக்கில் பெருமாள் மற்றும் நாச்சியார் புறப்பாடு நடக்கிறது. விழாவின் கடைசி நாளான, ஜூன், 28 காலை, 8:00 மணி முதல் திருமஞ்சனம், கேடயம் பெருமாள், நாச்சியார் புறப்பாடு நிறைவடைந்து, இரவு, 9:30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.