பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
11:06
பனமரத்துப்பட்டி: குரால்நத்தம் அரசு பள்ளியில், சரஸ்வதி தேவிக்கு யாக பூஜை நடந்தது. இதில், பெற்றோர், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், 88 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தனியார் பள்ளிக்கு போட்டியாக, வாகன வசதி உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றனர். நடப்பாண்டில் கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி கிராமங்களைச் சேர்ந்த, 33 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
நேற்று காலை, 7:00 மணிக்கு, பள்ளி வளாகத்தில், கல்வி கடவுள் சரஸ்வதி படத்துக்கு மாலை அணிவித்து, பூஜை செய்தனர். அனைத்து மாணவ, மாணவியருக்கும் மாலை அணிவித்து, வரிசையாக அமர வைத்து, படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என, கூட்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, மாணவர்கள் வரிசையாக வந்து, யாக குண்டத்தில், பூஜை பொருட்களை போட்டு வழிபட்டனர். பின், குழந்தைகள் மீது மஞ்சள் அரிசி, பூக்கள் துாவி, பெற்றோர் ஆசீர்வாதம் செய்தனர். இந்த பூஜையில், உதவி தொடக்க கல்வி அலுவலர் மாதவராஜன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், கிராம மக்கள் பங்கேற்றனர். ஆசிரியர் தெய்வநாயகம் கூறுகையில், ‘‘அரசு பள்ளியில், குழந்தைகளை சேர்க்கும்படி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, யாக பூஜை நடந்தது. இப்பள்ளியில் ஸ்மார்ட் போர்டு உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன,’’ என்றார்.