பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
02:06
திருப்பதி: திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதம் மற்றும் தலைமுடி விற்பனைக்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக, ஆந்திர நிதி அமைச்சர், ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், ஆந்திர நிதி அமைச்சர் ராமகிருஷ்ணா கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை, அடுத்த மாதத்திலிருந்து மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இந்த புதிய வரி மூலம் லட்டு பிரசாதம் தயாரித்தல், வாடகை அறை, பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், தலைமுடி விற்பனை செய்தல் என அனைத்திற்கும் வரி விதிக்கப்படும். அதனால் லட்டு பிரசாதம், வாடகை அறை உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினோம். அதை ஏற்று, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, லட்டு பிரசாதம் மற்றும் தலைமுடி விற்பனை ஆகிய இரண்டிற்கு மட்டும், ஜி.எஸ்.டி., யிலிருந்து விலக்கு அளிக்க சம்மதித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.