பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
02:06
புண்ணிய ஸ்தலங்களிலே பலவகை உண்டு. பிரம்மாண்டமான கோபுரம், நெடிய சிலைகள், வண்ண வேலைப்பாடுகள் கொண்டவையும் உண்டு. அமைதியான அழகிய சிறிய கட்டிட அமைப்புடன், பவித்ரமான சக்தி நிறைந்த கோயிலுடன், திவ்யமாக விளங்கும் ஸ்தலமும் உண்டு. இரண்டாவது வகையைச் சேர்ந்ததுதான் லக்ஷ்மிபுரம் எனும் திவ்ய ஸ்தலம். குப்பம் தாலுகாவில், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் மார்க்கத்தில், சென்னையிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் இந்தப் புண்ணிய ஸ்தலம் அமைந்திருக்கிறது. இந்த ஸ்தலம் ஸ்ரீரங்கராமானுஜ மஹாதேசிகன் எனும் மஹானின் அவதார ஸ்தலம். அந்த பெரிய மஹானுடைய நினைவாகக் கட்டப்பட்டிருக்கும் இந்த மந்திரத்தின் சிறப்பு என்ன?
மஹாவிஷ்ணுவின் அவதாரமான லக்ஷ்மி ஹயக்ரீவரின் விக்ரஹம் ஒரு புறம் அமைந்திருக்க, அதனருகே சுவாமி தேசிகன் சம்ப்ரதாயத்தின் மிக உயர்ந்த நிகரில்லாத, பல ஆச்சார்யர்களின் குருவான ஆசார்யரான கேதாண்டப்பட்டி சுவாமி ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகன் அவருடைய விக்ரஹம் செவ்வனே வீற்றிருப்பதை நாம் காண்கிறோம். இந்த இரண்டு விக்ரஹங்களும் ஸ்ரீமத் ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ர அபிநவ வாகீஸ பரகல ஸ்வாமியால் பிரதிஷ்டாபனம் செய்யப்பட்டது. ஞானத்தின் இருப்பிடமானவரும், மகாவிஷ்ணுவின் ஸ்ரேஷ்டமான அவதாரமானவரும், நான்கு வேதங்களை மது மற்றும் கைடதப அரக்கர்களிடமிருந்து மீட்டு ப்ரஹ்மதேவரிடம் கொடுத்தவருமான லக்ஷ்மிஹயக்ரீவரின் அனுக்ரஹத்தைப் பெறுவதற்காக இந்த திவ்ய ஸ்தலத்துக்குச் செல்வது மிகவும் சிலாக்கியமானது.
ஹய (குதிரை) யின் சிறப்புகள் பல என்பதைப் பலரும் அறிவர். புருஷ சூக்தத்தில் விராட புருஷத்தில் (அச்வ) குரையின் மூலம் சொல்லப்படுகிறது. அஸ்வமேத யாகம் ராமர் நடத்திய ஒரு மங்களகரமான யாகம். தான் சக்கரவர்த்தியாய் மகுடம் சூட்டப்பட்டதும் ராமர் இத்தகைய நூறு யாகங்களை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. அஸ்வ வித்தை - நளமகாராஜா தன்னுடைய மேல் உத்தரீயத்தை ரதத்தில் பயணிக்கும்போது மிக தூரத்தில் தொலைத்துவிட்ட பிறகு அதை மீண்டும் பெற இந்த வித்தையைப் பயன்படுத்தியிருந்தார். அஸ்வ வித்தையின் மூலம் மேல் உத்தரீயம் எந்த இடத்தில் விழுந்திருந்தது என்பதை நளமகாராஜா மிகத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிந்தது. அறிவியலில் சக்தியின் எல்லா அளவுகளும் குதிரைத்திறன் என்று அறியப்படுகின்றன. இவை எல்லாமே ஹயக்ரீவ அவதாரத்தின் மகிமையை உயர்த்திக் கூறுகின்றன. ஹயக்ரீவர் கோயிலின் அருகே ஒரு அழகான பிரார்த்தனை மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. ஒரு விசேஷம், பக்தாதிகள் மௌனமாக, பகவானை ஸ்மரணை செய்து எல்லையில்லா மன நிம்மதியை அடைவதற்கு ஏற்றதாக இது அமைந்துள்ளது. தெய்வீக மணத்தையும் பரப்புகிறது. இத்தகைய புனிதமான ஸ்தலத்தை செவ்வனே பாதுகாத்து, லக்ஷ்மி ஹயக்ரீவருக்கும், கேதாண்டப்பட்டி ரங்கராமானுஜ மகாதேசிகருக்கும் நித்யபூஜை, புனஸ்காரங்களை முறையே செய்வித்து, வேதபாராயணம், இதிகாசம், புராணங்கள், திவ்யப்ரபந்தம் மற்றும் க்ரந்த சதுஷ்டாய பாராயணங்களை புண்யகாலங்களில் ஏற்பாடு செய்து வருகிறது ரங்கராமானுஜ மகாதேசிக டிரஸ்ட்.
மற்றொரு விசேஷம் - இதன் தலைவர் சக்ரவர்த்தி தன்பெங்களூரு க்ரஹத்தில் மகிமை வாய்ந்த கேதாண்டப்பட்டி ஸ்ரீரங்கராமானுஜ மகாதேசிகரின் பாதுகைகளை ஒவ்வொரு மூல நக்ஷத்திர நாளிலும், த்வாதசி நாளிலும் ஆராதனையை பக்தியுடன் செய்து, பாதுகைக்கு அபிஷேகம் செய்து தீர்த்தம் விநியோகிக்கிறார். இந்தத் தீர்த்தம் சகல பாவங்களையும் தீர்க்கவல்லது. ஒரு பிரம்மராக்ஷசனுக்கு விமோசனத்தைத் தந்தது இந்தத் தீர்த்தம். கேதாண்டப்பட்டியில் லக்ஷ்மி ஹயக்ரீவரை தரிசித்து, சுவாமிகளை நமஸ்கரித்து அங்கிருந்து, இரண்டே மணி நேரத்தில் பெங்களூரு வந்து சக்ரவர்த்தி வசித்து வரும் வக்கீல் கார்டன் சிட்டி, கனகபுராரோட் வீட்டிற்கு, வந்து, ஸ்வாமியின் திவ்ய தீர்த்தத்தையும் பெறலாம்.