பதிவு செய்த நாள்
03
ஜூலை
2017
11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், உலக அமைதிக்காக, 27ம் ஆண்டு மகா கிரிவல பூஜை மற்றும் மகேஸ்வர பூஜை நடந்தது. உலக நன்மைக்காக, புதுச்சேரி ஓங்கார ஆஸ்ரமம் சார்பில், ஓங்கார ஆஸ்ரம தலைவர் ஓங்காரநந்தா தலைமையில், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களுக்கு, நேற்று முன்தினம் மகா அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் இருந்து துவங்கி, மகா கிரிவலம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று கிரிவலப் பாதையில் உள்ள ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனத்தில், உலக அமைதியை வேண்டி, சாதுக்கள் ஜெபம், பஞ்சாட்சர ஜெபம், மகேஸ்வர பூஜை நடந்தன. இதில், 300க்கும் மேற்பட்ட சாதுக்கள் பங்கேற்றனர். இதில், திருவண்ணாமலையை புனித நகரமாக அரசு அறிவிக்க வேண்டும், தெய்வீக நகரமான வாரணாசிக்கு செல்ல, சென்னையிலிருந்து நேரடி விமான சேவையை அரசு செய்து தர வேண்டும். திருவண்ணாமலையில் வாழும் துறவிகளுக்கு, அவர்கள் இறந்த பிறகு அவர்களை அடக்கம் செய்யவும், ஈம காரியங்கள் செய்யவும், மாநில அரசு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.