பதிவு செய்த நாள்
03
ஜூலை
2017
11:07
ஆர்.கே.பேட்டை: மன்னர்கள் காலத்தில், போர்ப்படை வீரர்கள், குதிரை மற்றும் யானைகள் தங்கி இளைப்பாற இடம் அளித்தவை ஆலமரங்கள். அத்தகைய பரந்த நிழல்வெளிக்கு சொந்தமான ஆலமரங்களை தற்போது காண்பது அரிதாக உள்ளது. ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள ஒன்றிரண்டு மரங்கள், அபூர்வமாக அவற்றின் பெருமையை இன்று வரை நிலைநாட்டி வருகின்றன. ஆர்.கே.பேட்டை அடுத்த, காபூர் கண்டிகை, நேசனுார் உள்ளிட்ட இடங்களில் ௧௦௦க்கும் மேற்பட்ட விழுதுகளுடன் பரந்து விரிந்துள்ள ஆலமரங்களை காண முடிகிறது.
பசும் புல்வெளி: இதே போல், புதுார் மேடு கிராமத்தில் இருந்து பைவலசா செல்லும் சாலையில், மற்றொரு ஆலமரம் தனிசிறப்புடன் பகுதிவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. புதார் மேடு கிராமத்தில் இருந்து, பைவலசா செல்லும் சாலையின் இரு மருங்கிலும் கண்ணுக்கெட்டிய துாரம் வரை பசும் புல்வெளி உள்ளது. இந்த புல்வெளியை நம்பி, நாடோடிகள் சிலர் தங்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்காக, இங்கு கொண்டு வருகின்றனர். இந்த நாடோடிகள், புதுார் மேடு திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில், மாதக்கணக்கில் தங்கி மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த புல்வெளியில், மரங்களே கிடையாது. பல நுாறு சதுர பரப்பளவில், ஒற்றை மரமாக அமைந்துள்ளது இந்த மாபெரும் ஆலமரம்.
100 விழுதுகள்: நுாற்றுக்கும் மேற்பட்ட விழுதுகளுடன் தன்னை பலப்படுத்தி கொண்டுள்ளது. ஒரு கிராமமே அதன் அடியில் தஞ்சம் புகுந்தாலும், நிழல் தரும் அளவிற்கு பரந்து விரிந்து உள்ளது இதன் கிளைகள். புல்வெளிக்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள், வெயில் நேரத்தில் இந்த ஆலமரத்தின் அடியில் தங்கி இளைப்பாறுகின்றன. அபூர்வமான இத்தகைய ஆலமரங்கள், அடுத்த தலைமுறையினருக்கு ஒரு பாடம். தற்போது பெருமளவில் நடப்படும் மரக்கன்றுகளில், ஆலமர கன்றுகள் நடப்படுவது மிகவும் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.