கணபதியின் வடிவபேதத்தை 21, 32, 70 என்று பலவாகச் சொல்வார்கள். பிரம்மச்சாரியாகவும் விளங்குவார். சித்தி, புத்தி, எனும் இரு தேவியருடனும் காட்சிதருவார். கணேஷினி, விநாயகி எனும் பெயர்களில் பெண் வடிவாகவும் காட்சிதருவார். இத்தகையனவற்றுள் ஒன்று ஸ்ரீவித்யா கணபதி வடிவம். எட்டுக் கரங்களில் சங்கு, சக்கரம், சூலம், பாசம், கதாயுதம், கரும்பு, நெற்கதிர், தாமரை ஆகியவற்றை ஏந்தி நிற்பவர். துதிக்கையில் கும்பம் ஏந்தியவர். இளம்பிறைச் சந்திரனைச் சூடியவர். முக்கண் கொண்டவர். கணபதி என்றாலே தடைகளைக் களைந்து வெற்றியைத் தருபவர்; முதல் வணக்கத்துக்குரியவர் என்பது அனைவருக்கும் தெரியும். வித்யா கணபதி அனைத்து கலைகளிலும் நுண்ணறிவைத் தருவார். தீய எண்ணங்களை விலக்கி நல்லறிவைத் தருவார். பலவிதமாகத் தோன்றும் இன்னல்களைப் போக்கியருளுவார். எண்ணிய காரியங்களை எண்ணியபடி முடித்துத் தருவார். அறிவு வளர்ச்சியைத் தருவார். ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வர வரத ஐம் ப்ளூம் சர்வ வித்யாம் தேஹி ஸ்வாஹா என்னும் மந்திரத்தை, தினமும் காலையில் 108 முறை சொல்லி வணங்கினால் எல்லாம் சித்திக்கும்.