பதிவு செய்த நாள்
05
ஜூலை
2017
05:07
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி, திருக்கோலக்கா தெருவில் தேவாரப் பாடல் பெற்ற திருத்தாளமுடையார் கோயில் என்று அழைக்கப்படும் ஓசை நாயகி அம்பாள் சமேத தாளபுரீஸ்வரர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயிலில் திருஞானசம்பந்தர் தனது 3 வயதில் கைகளால் தாளமிட்டபடி பதிகம் பாடியுள்ளார். அவருக்கு சிவபெருமான் பொற்றாளத்தையும், அம்பாள் அதற்கான ஓசையையும் வழங்கியதாக ஐதீகம். இத்தலத்தில் சுவாமி, அம்பாளை வணங்கினால் காது கேளாத, வாய்பேச முடியாத குழந்தைகளின் குறைகள் நிவர்த்தியடையும் என கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 28ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இன்ரு காலை 6ம் கால யாக சாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹுதி மற்றும் மஹா தீபாராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம்வந்து சுவாமி, அம்பாள் விமானங்களை அடைந்தது. அதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ராமநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். இதில் தருமபுரம் ஆதின இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி, திரப்பனந்தாள் காசி மடத்து இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திரு ஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.