கூட்டு வண்டியில் குலதெய்வ வழிபாடு: குடும்ப ஒற்றுமைக்காக தொடரும் பழக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2017 11:07
சிவகங்கை: சிவகங்கை அருகே குடும்ப ஒற்றுமைக்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 500 குடும்பத்தினர் கூட்டு வண்டியில் சென்று குலதெய்வ வழிபாடு நடத்தினர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலபிரடாவூர் கிராமத்தில் முத்தையாசாமி கோயில் உள்ளது. இக்கோயிலை குலதெய்வமாக கொண்ட 500 க்கும் மேற்பட்டட குடும்பத்தினர் மாநிலத்தில் பல பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்கள் குடும்ப ஒற்றுமைக்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றாக சேர்ந்து குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஜூலை 6ல் அவர்கள் மானாமதுரை அழகர்கோயிலில் கூடினர். ஜூலை 7 ல் முத்தையா கோயிலில் வழிபாடு நடத்தினர். பூஜைகள் முடிந்ததும் நடை பயணமாக கூட்டு வண்டியில் புறப்பட்டு நேற்றுமுன்தினம் சிவகங்கை வழியாக ஒக்கூர் புதுார் சென்றனர்.
அங்குள்ள கோயில் வீடடில் குலதெய்வ வழிபாட்டை நிறைவு செய்தனர். அவர்களில் பலர் கார், பங்களா என, வசதியாக இருந்தாலும் முன்னோர் வாக்குப்படி இன்றும் கூட்டு வண்டிகளில் சென்று குலதெய்வ வழிபாடு செய்கின்றனர். சிவகங்கை ராமச்சந்திரன் கூறியதாவது: ஆனி மாதத்தில் வழிபாடு நடத்துவது வழக்கம். பரம்பரை பகை இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டின்போது அதனை மறந்து ஒன்றாகி விடுவோம். கூட்டாக சேர்ந்து சமைத்து உண்போம். இதன்மூலம் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி, உறவை மேம்படுத்தி கொள்வோம். இதற்காகவே அவரவர் வீடுகளில் மாட்டு வண்டியை பராமரித்து வருகிறோம், என்றார்.