பதிவு செய்த நாள்
10
ஜூலை
2017
12:07
பல்லடம் : ‘வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை போக்க, கடவுள் வழிபாடு அவசியம்,’ என யோகா மைய நிறைவு விழாவில், தென்சேரிமலை ஆதீனம் தெளிவுபடுத்தினார். பல்லடம் அருகே கே.அய்யம்பாளையம், முத்தமிழ் இசை யோகா மருத்துவ மையத்தின் சார்பில், 2ம் ஆண்டு யோகா மைய நிறைவு விழா, அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது. யோகா ஆசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார். தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி
அடிகள் பேசியதாவது: மனித வாழ்க்கையில், உடல் மிகவும் அவசியமானது. உடலை பாதுகாப்பதற்கே நம் முன்னோர்கள் யோகாசனம் உள்ளிட்ட வழிமுறைகளை வழங்கியுள்ளனர். மனிதர்களின் வாழ்க்கை முறை மாறியதாலேயே, அனைவரும் மருந்தை தேடி நாள்தோறும் அலைகிறோம்.
பச்சை புல்லை வெட்டி போட்டாலும், மாடு படுத்துக்கொண்டு ஒருபோதும் புல்லை திண்ணாது. ஆனால் மனிதர்களாகிய நாம், நின்றுகொண்டும், நாற்காலியில் உட்கார்ந்தும் சாப்பிடுகிறோம். விலங்குகளுக்கு தெரிந்தது கூட, மனிதர்களாகிய நமக்கு தெரிவதில்லை. மனிதர்கள் உடலாலும், மனதாலும் துன்பப்பட்டு வருகிறோம். துன்பங்களை களைந்து வாழ்வில் தெளிவுபெற வேண்டுமானால், யோகாசனம், கடவுள் வழிபாடு உள்ளிட்டவற்றை செய்து, இறைவனை சரணாகதி அடையலாம். இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, பல்லடம் யோகா மையத்தின் சார்பில், பயிற்சி பெற்றவர்கள், பலரும் யோகாசனம் செய்து அசத்தினர்.