காஞ்சிப் பெரியவர் அடிக்கடி பட்டினி கிடப்பார். உணவின் ருசி எப்படி இருந்தாலும் பொருட்படுத்தாமல் சாப்பிடுவார். ஆனால் மடத்தின் சமையல்காரரோ பெரியவரின் பசி, ருசி குறித்து மிகுந்த அக்கறை கொள்வார். ஒருநாள் கீரை மசியல் பரிமாற உடனே சாப்பிட்டார் பெரியவர். சமையல்காரர் மேலும் கொஞ்சம் பரிமாற மீதம் வைக்க கூடாது என்பதால் சாப்பிட்டார். சரி தான்.... கீரை மசியல் பெரியவருக்கு மிக பிடிக்கிறது என்ற முடிவுக்கு வந்தார் சமையல்காரர். அன்று முதல் நாலைந்து நாள் தினமும் கீரை உணவில் இடம் பிடித்தது. ருசிக்காக அல்லாமல் பசிக்காக மட்டும் சாப்பிடும் பெரியவர் சாப்பிடும் போது, என்ன நாலைஞ்சு நாளா தொடர்ந்து கீரை மசியல்?எனக் கேட்டார்.
சமையல்காரர் தயங்கியபடி பெரியவா... மசியலை விரும்பிச் சாப்பிடப் பார்த்தேன். அதனால தொடர்ந்து கீரையைச் சமைத்தேன் என்றார். ஓகோ! என்ற பெரியவர் வேறேதும் சொல்லவில்லை. மறுநாள் மதியம் சாப்பிட அழைக்க வந்த போது பெரியவரைக் காணவில்லை. எங்கே எனத் தேடிய போது ஆச்சர்யம் காத்திருந்தது. மாட்டுக் கொட்டிலில் சாணத்தின் அருகில் குழந்தை போல உட்கார்ந்திருந்தார் பெரியவர். சாணியைச் சிறு சிறு உருண்டையாக்கி வாயில் இட்டுக் கொண்டிருந்தார். சுவாமி....என்ன காரியம் செய்கிறீர்கள்? என்றார் சமையல்காரர்.
பெரியவர் சிரித்தபடி உன் மீது தப்பில்லை. நாக்கு எனக்கு கட்டுப்படாமல் கீரை சாப்பிட ஆசைப்பட்டுள்ளது. அதை உணர்ந்த நீயும் நாலைஞ்சு நாளா கீரை சமைத்தாய். சன்யாசி என்பவன் முதலில் நாக்கு ருசியை வெல்ல வேண்டாமா... அது தான் இப்போ சாணியை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஏ நாக்கே...! உனக்கு கீரையும், சாணியும் ஒன்று தான். எல்லாம் கடவுள் படைப்பு தான் என நாக்கிற்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன்! பெரியவரின் வைராக்கியம் கண்ட சமையல்காரர் பிரமிப்பில் ஆழ்ந்தார்.