பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
12:07
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு ஆடிப்பண்டிகை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணியால், கருவறை தவிர்த்து, அனைத்து பகுதிகளும் இடித்து, பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பக்தர்களில் ஒரு பிரிவினர், கருவறை விவகாரம் குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், கட்டுமானப்பணி தொடங்கவில்லை. இதனால், நடப்பாண்டு பண்டிகை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. கோவில் நிர்வாகத்துக்கு எதிராக, சில இந்து அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. கோவில் நிர்வாகமும், பண்டிகை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நடப்பாண்டு கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவில் செயல் அலுவலர் மாலா கூறுகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசிடம் பேசி, பண்டிகை குறித்து முடிவு எடுக்கப்படும். இப்போது, வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை, என்றார்.
144 தடை உத்தரவு? ஆடிப்பண்டிகை நடத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், சில இந்து அமைப்புகள், பண்டிகை நடத்துவோம் என அறிவித்துள்ளன. இதனால், அசம்பாவிதம் நடக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்து அமைப்புகளை உளவு பிரிவு, நுண்ணறிவு பிரிவு போலீசார் கண்காணிக்கின்றனர். பிற மாரியம்மன் கோவில்களில், பண்டிகை பூச்சாட்டுதலுடன் தொடங்கும் நிலையில், கோட்டை மாரியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைப்பது குறித்து, போலீஸ் அதிகாரிகள் ஆலோசிப்பதாக, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.