பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
01:07
மகா அபிஷேகத்தை திருமஞ்சனம் என்றும் சொல்லலாம். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல், தேவர்களுக்கு வைகறை மார்கழி, காலைப்பொழுது மாசி, உச்சிக் காலம் சித்திரை, மாலைப் பொழுது ஆனி, இரவுப் பொழுது ஆவணி, அர்த்தஜாமம் புரட்டாசி என்று கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில், சந்தியா காலங்களான ஆனியும், மார்கழியுமே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதங்களாகப் கருதப்படுகின்றன. ஈசனின் திருநட்சத்திரம் திருவாதிரை, மிக உஷ்ணமான நட்சத்திரம். தவிர, ஆலகாலம் உண்ட நீலகண்டன். அக்னியை ஏந்திக் கொண்டிருப்பவன் ஈசன். ஆகவே, அவனுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் செய்யச் சொல்கிறது ஆகமவிதி. இதனால்தான் சிவபெருமானை அபிஷேகப் பிரியன் என்று கொண்டாடுகிறோம். பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என குளிர்ந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகிக்கிறோம். கோடை அக்னி நட்சத்திர தருணம் முடிந்து, வெப்பத்தில் தகித்த திருமேனிக்கு, ஆனியில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழா, பத்து நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனியில் நடைபெறும் இந்தத் திருமஞ்சன விழாவைத் துவக்கி வைத்தவர், யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி மகிரிஷி.