சிங்கம்புணரியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த புரவி எடுப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2017 03:07
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் 22 ஆண்டுகளுக்குப்பிறகு புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இங்குள்ள கூவானை மலையடிவாரத்தில் பூரணை, புட்கலை சமேத கூவானை அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் 22 ஆண்டுகளுக்கு முன்பு வரை புரவி எடுப்புத்திருவிழா நடந்து வந்தது. கூவானை கண்மாய் ஆயக்கட்டுதாரர்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த இத்திருவிழா விவசாயம் பொய்த்துப்போனது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது.
தற்போது 22 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் இத்திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இதையொட்டி 15 நாட்களுக்கு முன்பு விழா கமிட்டியினர் சார்பில் பிடிமண் கொடுக்கப்பட்டது. அதைக்கொண்டு 2 பெரிய புரவிகளும், 7 சிறிய புரவிகளும் சிங்கம்புணரி வேளார் தெருவில் வைத்து செய்யப்பட்டன. நேற்று ஜூலை 9 ம் தேதி மாலை 3:00 மணியளவில் கோயிலில் இருந்து ஆயக்கட்டுதாரர்கள், விழாக்கமிட்டியாளர்கள் புரவி இருக்கும் இடத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு புரவிகளுக்கு அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு புரவி ஊர்வலம் தொடங்கியது. அரண்மனை பெரிய புரவிகள் இரண்டும் முன்னால் செல்ல, 7 சிறிய நேர்த்திக்கடன் புரவிகள் பின்னால் சென்றன. வழி நெடுகிலும் பக்தர்கள் கூடிநின்று புரவிகளை வழிபட்டனர்.