பதிவு செய்த நாள்
22
நவ
2011
11:11
திருப்பூர் : உலக அமைதி வேண்டியும், மக்கள் அனைவரும் அனைத்து நலன்கள் பெற வேண்டியும், செங்கப்பள்ளியில் உள்ள ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அம்மையப்பர் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. பவானி சிவனடியார் திருக்கூட்ட தலைவர் தியாகராஜன் முன்னிலையில், கோவை மாணிக்கவாசகர் மன்ற சிவனடியார்கள் பன்னிரு திருமுறைகள் ஓதி, தமிழ் முறைப்படி அம்மையப்பருக்கு திருமண வைபவம் நடத்தினர். சிவனடியார்கள், விநாயகர் அகவல், திருவாசகம், சிவபுராணம், அபிராமி அந்தாதி, கந்தர் அனுபூதி, சகலகலாவல்லி மாலை ஆகிய பக்தி பாடல்கள் பாடினர். அம்மையப்பர் சுவாமிகளுக்கு மலர் தூவி வழிபாடு நடத்தப்பட்டது. "தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என சிவனடியார்கள், மாணவர்கள், பெற்றோர் எழுப்பிய கோஷம் விண்ணை தொட்டது. விநாயகர், அம்பிகை உடனமர் சிவபிரான் மற்றும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிலைகளை பக்தர்கள் வணங்கினர். திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீகுமரன் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீகுமரன் பள்ளிகளின் தலைவர், தாளாளர், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீகுமரன் மருத்துவமனை மற்றும் ஸ்ரீகுமரன் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.