பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
10:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆடி கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், பொது வழியில், 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ஆண்டு தோறும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை விழா ஆடிக்கிருத்திகை விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை தரிசிப்பர். இதுதவிர லட்சக்கணக்கான பக்தர்கள் ஆடிக்கிருத்திகை விழாவின் போது, மொட்டை அடித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர்.
குழப்பம்: பொதுவாகவே ஆடி மாதத்தில் ஒரு கிருத்திகை மட்டுமே வரும். ஆனால், 40 ஆண்டுகளுக்கு மேலாக, முதன் முறையாக ஆடி மாதத்தில், 2 கிருத்திகை வந்ததால், ஆடிக்கிருத்திகை எது என, தெரியாமல் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர். முருகன் கோவில் நிர்வாகம், அடுத்த மாதம், ஆக., 15ம் தேதி தான் ஆடிக்கிருத்திகை விழா என, சில நாளிதழ்களில் மட்டுமே செய்தியாக வெளியிட்டது. மேலும், கோவில் நிர்வாகம், நகரின் முக்கிய இடங்களில் ஆடிக்கிருத்திகை அடுத்த மாதம், 15ம் தேதி என்று தொடர்ந்து மூன்று நாள் நடக்கும் தெப்பத்திருவிழா எனவும் நிகழ்ச்சி நிரலுடன் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.இதனால், வெளி மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் நேற்று நடந்த கிருத்திகை தான் ஆடிக்கிருத்திகை என கணக்கில் கொண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலர், பால் மற்றும் மயில் காவடிகளுடன் அதிகாலை, 3:00 மணி முதல் குவிய தொடங்கினர்.
நெரிசல்: நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, அதிகாலை, 5:00 மணி முதல், நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோவில் நிர்வாகம் முறையாக தரிசனத்திற்கு வழி ஏற்படுத்தாததால், பக்தர்கள் மலைக்கோவில் மற்றும் கோவில் உட்புற வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. குழந்தைகளுடன் வந்த பக்தர்கள் மற்றும் காவடிகளுடன் வந்த பக்தர்கள் மூலவரை தரிசிப்பதற்கும், வெளியே செல்வதற்கும் கடும் சிரமப்பட்டனர். மேலும் கோவில் உட்புறத்தில் பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். இதனால் சில பக்தர்கள் மூலவரை தரிசிக்க தடுப்பு களை தாண்டியும், ஏறி குதித்தும் தரிசனத்திற்கு சென்றனர். மலைக்கோவில் பொது வழியில் தரிசிக்க, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆறு மணி நேரம் காத்திருந்த பின்பு தான் மூலவரை தரிசிக்க முடிந்தது.
சிறப்பு தரிசன டிக்கெட்: பக்தர்கள் விரைவாக தரிசிப்பதற்கு, 100, 50 மற்றும் 25 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இந்த தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரத்திற்கு பின், கடும் சிரமத்துடன் தான் மூலவரை தொலைதுார தரிசனம் மூலம் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் கோவில் நிர்வாகம் முறையாக பக்தர்களுக்கான முன்னேற்றப்பாடுகள் செய்யாமல் மெத்தனம் காட்டியதால் பக்தர்கள் நேற்று கடும் சிரமப்பட்டனர்.
அபிஷேகம்: ஆடி கிருத்திகை விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலையில் பஞ்சாமிர்தம் அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம், மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர், மஞ்சள், தயிர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். திருத்தணி டி.எஸ்.பி., பாலசந்தர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.