பழநியில் மலேசிய பக்தர்கள் பால்குடம்: 2 மணிநேரம் காத்திருந்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2017 11:07
பழநி: ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு மலேசிய பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். பழநி மலைக்கோயில் ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மலேசிய பக்தர்கள் பால்குடங்கள் மற்றும் காவடிகள் எடுத்து படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு சென்றனர். மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் கேரளா, ஆந்திரா, கர்நாடக உட்பட பல மாநில பக்தர்களும், உள்ளூரைச் சேர்ந்த பக்தர்களும் பால்குடங்கள், தீர்த்தக்காவடி எடுத்து படிப்பாதையில் கற்பூரம் ஏற்றி படிபூஜை செய்தனர். கார்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அதிகாலையில் குவிந்த பக்தர்கள் பொது தரிசன வழியில் 2 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். திருஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சுவாமி மயில் வாகனத்திலும், பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை வெள்ளி மயில் வாகனத்திலும் எழுந்தருளி திருவுலா வந்தனர்.