பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
01:07
ஆர்.கே.பேட்டை:ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, அம்மன் கோவில்களில் நேற்று, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அம்மனுக்கு உகந்த வேப்பம் மரத்துக்கு, மஞ்சள் குங்குமமிட்டு வழிபட்டனர். அம்மன் கோவில்களில், ஆடி சிறப்பு வழிபாடு, வெள்ளிக்கிழமையை ஒட்டி, நேற்று கோலாகலமாக துவங்கியது. கோவில் வளாகம், வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. காலை முதலே, பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. குலதெய்வ கோவில் களான பெருமாநல்லுார் ஓசூரம்மன், வெள்ளாத்துாரம்மன் மற்றும் பாண்டரவேடு தொப்பையம்மன், பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன், வங்கனுார் செவிண்டியம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடந்தன.
காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பெண்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். அதேபோல், சப்த கன்னியர் கோவில்கள் மற்றும் நாகாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வேப்ப மரங்களுக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து, பெண்கள் அலங்கரித்தனர். கோவில்களில் வழங்கப்பட்ட அம்மன் பிரசாதமான வேப்பிலையை பெற்றனர். தொடர்ந்து மாலை, 4:30 மணிக்கு சிவாலயங்களில் நடந்த பிரதோச வழிபாட்டில் பங்கேற்று, பக்தர்கள் அபிஷேக தரிசனம் செய்தனர். வங்கனுார் வியாசேஸ்வரர், காந்தகிரி அகத்தீஸ்வரர் மலைக்கோவில்கள் மற்றும் மட்டவளம் கோவத்ச நாதேஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.