பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
01:07
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில், கபிலர் விழாவை, ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் துவக்கி வைத்து, அருளுரை வழங்கினார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம் சார்பில், 42வது ஆண்டு கபிலர் விழா, நேற்று துவங்கியது. திருக்கோவிலுார், சுப்ரமணிய திருமண மஹால் மண்டபத்தில், விழாவை துவக்கி வைத்து, திருக்கோவிலுார் ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் பேசியதாவது: ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும் மக்களுக்கு ஞானத்தை போதிப்பவர்கள். இவர்களால், தமிழ்நாட்டிற்கே பெருமை. குறிப்பாக, ராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமி இது. அவர் அவதரித்து, 1,000 ஆண்டுகள் ஆகிறது. எவ்வளவோ ஆச்சாரியர்கள் இருந்திருக்கலாம் என்றாலும், ராமானுஜரின் தொண்டுகளையும், பணிகளையும், யாராலும் ஈடு செய்ய முடியாது. எல்லாரும் கோவிலுக்கு செல்லலாம். ஆனால், பக்தி முறைப்படி செல்ல வேண்டும். இதில், உயர்ந்த, தாழ்ந்த குலம் கிடையாது என, மெய்ப்பித்தவர் ராமானுஜர். இறைவனுக்கும், அவருக்கும் தொடர்பு இருந்தது.எந்த பிறவியில் வைகுண்டம் செல்வோம் என்பது, யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த வைகுண்டத்தின் சாவியை, ஸ்ரீரங்கத்தில் கொண்டு வந்து, ராமானுஜருக்கு பெருமாள் வழங்கினார். யாருக்கு ராமானுஜரின் அருள் கடாட்சம் கிடைக்கிறதோ, அவருக்கு வைகுண்டம் நிச்சயம் என்கிறார் பகவான். யாரிடமும், எந்த காழ்ப்புணர்ச்சியும், பொறாமையும் அவருக்கு கிடையாது. அவருக்கு தீங்கு செய்தவர்களையும் மன்னித்தவர். சிறப்பு வாய்ந்த மகான் அவதரித்த, ஆயிரமாவது ஆண்டில் நடைபெறும் இவ்விழா சிறக்க வாழ்த்துகள். இவ்வாறு ஜீயர் சுவாமிகள் பேசினார்.