பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
01:07
காஞ்சிபுரம்:ஆடி முதல் வெள்ளியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த, சிறப்பு அபிஷேகம், ஆராதனையில்,ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆடி மாதம், அம்மனுக்கு, மிகவும் உகந்த மாதம் என்பதால், இம்மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில், ஆடித்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆடி முதல் வெள்ளியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன.காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், ருத்ர பாராயணத்துடன் அம்மனுக்கு, விசேஷ அபிஷேகம் நடந்தது. 11 விதமான பழச்சாறு அபிஷேகமும், 9 விதமான சித்ர அன்னங்கள், 11 விதமான பழங்கள் நைவேத்யம் செய்யப்பட்டது. மாலை, தங்கரதத்தில் அம்மன் உட்பிரகார வீதியுலா வந்தார்.ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் (ஆதிகாமாட்சி) கோவிலில், அம்மன் மூகாம்பிகை அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. மாலை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கருக்கினில் அமர்ந்தவள் கோவிலில், பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வணங்கினர். இரட்டை மண்டபம், ரேணுகாதேவி கோவிலில், ஆடி கூழ் செய்து, அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்தனர். கச்சபேஸ்வரர் கோவிலில், பெண்கள் நாக சிலைகளுக்கு பூஜை செய்து, புற்றுக்கு பால் ஊற்றினர். அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.