பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
12:07
பரமக்குடி,: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடிபிரம்மோற்ஸவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு அனுக்கை, வாஸ்து சாந்தி பூஜை, நிறைவடைந்து, நேற்று காலை 9:00 மணிக்கு ஆடி பிரம்மோற்ஸவத்தையொட்டி, கருடன் மற்றும் கொடிமரத்திற்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அர்ச்சகர்கள் ஸ்ரீதரன், ராகவன், சத்யா ஆகியோர் வேத மந்திரம் முழங்க கோயில் கொடிமரத்தில் கருடக்கொடியை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பெருமாள் இரவு ஹம்ச வாகனத்தில் மோகினி அவதாரத்தில் வீதிவலம் வந்தார்.
இன்று யோகநரசிம்மராக சிம்ம வாகனத்திலும், வைகுண்டநாதனாக சேஷ, பஞ்சாயுதபாணியக கருட, ராமாவதாரத்தில் ஹனுமார் வாகனங்களில் தினமும் வீதியுலா வருவார். ஆக., 4 ல் மாலை 6:00 மணிக்கு பெருமாள் திருமண கோலத்தில் யானை வாகனத்தில் புறப்பாடாகி, ஆண்டாள் நாச்சியாருடன் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். மறுநாள் இரவு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் பூப்பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. ஆக., 6 ல் காலை 9:00 மணிக்கு பெருமாள் முத்துப்பல்லக்கில் நவநீதகண்ணன் அவதாரத்திலும், இரவு குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும் காட்சியளிப்பார். ஆக.7ல் காலை 9:05 முதல் 10:15 மணிக்குள் ஆடி பிரம்மோற்சவத்தையொட்டி பெருமாள் தாயாருடன் ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து பெருமாளுக்கு தேங்காய்கள் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கும். இரவு முத்துப்பல்லக்கில் சயன கோலத்திலும், மறுநாள் காலை தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.