பதிவு செய்த நாள்
01
ஆக
2017
12:08
மாமல்லபுரம்: மாமல்லபுரம், சப்த கன்னியம்மன் கோவிலில், ஆடி கூழ் வார்த்தல் உற்சவம், கோலாகலமாக நடந்தது. மாமல்லபுரத்தில், பழங்கால சப்த கன்னியம்மன் கோவில், நீண்ட காலத்திற்கு முன் வழிபாடு வழக்கொழிந்து, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இங்குள்ள அண்ணாநகர் பகுதியில், பாரம்பரிய காட்டுநாயக்கர் மக்கள் திறந்தவெளியில் வழிபட்ட சப்த கன்னியருக்கு, இப்பகுதி பக்தர்கள், சிலை, கோவில் அமைத்து வழிபடுகின்றனர்.கடந்த ஆண்டு, ஆடி மாத கூழ்வார்த்தல் உற்சவம், முதன்முதலாக நடத்தப்பட்டது. இந்த உற்சவம், நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது.காலையில் பக்தர்கள், கோவிலில் இருந்து, கடற்கரைக்கு, மேளதாளத்துடன் சென்று, கடலில் புனித நீராடினர். கரகத்தில் கடல் நீர் நிரப்பி, கடலிலிருந்து சப்த கன்னியரை எழுந்தருள செய்து, கோவிலை அடைந்தனர். கன்னியரை மலர்களால் அலங்கரித்து, சிறப்பு வழிபாடு நடத்தினர்.உற்சவம், பக்தர்கள் நலன் குறித்து, அருள்வாக்கு கேட்டு, கன்னியருக்கு கஞ்சி, கூழ் ஆகியவை படைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு கூழ்வார்த்து, இரவு அன்னதானம் வழங்கினர்.