திருச்சி - அன்பில் வழியில் லால்குடியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது பெருவளநல்லூர். இங்குதான் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் பல்லவர் ஆட்சியில் சீரமைக்கப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது தென்திசை நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. இங்குள்ள பிரகதீஸ்வரர் கருவறையில் லிங்கத் திருமேனியில் கீழ்த்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கே சிவபெருமானின் லிங்கத் திருமேனி பவள லிங்கமாய் காட்சி தருகிறது. முழுவதும் பவளங்களால் ஆனது இறைவனின் திருமேனி என பக்தர்கள் கூறுகின்றனர். தீபாராதனை காட்டும் போது மின்னலாய் லிங்கமேனி பிரகாசிக்கிறது. மகாமண்டபத்தின் எதிரே இறைவி பிரகந்நாயகி நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். மேல் இரு கரங்களில் அங்குசமும் பாசமும் இருக்க, கீழ் இரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரைகளைக் காட்டி அருள்பாலிக்கிறாள்.
திருச்சுற்றில் மேற்கில் விநாயகர் காட்சி தருகிறார். அடுத்து முருகன் சன்னதி. இங்கு முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகனாய் பன்னிரண்டு கரங்களுடன் மயில் வாகனத்தில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார். திருச்சுற்றின் வடக்குப் பகுதியில் இந்த ஆலயத்தின் தல விருட்சம் வில்வம் உள்ளது. தினசரி இரண்டு கால ஆராதனை நடைபெறும் இந்த ஆலயம் காலை 9 முதல் 10 வரையிலும்; மாலை 5 முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும். பொதுவாக சூரியன், பைரவர் திருமேனிகள் ஆலயத்தின் கிழக்கு பிராகாரத்தில் இருப்பது வழக்கம். ஆனால், இங்கு ராஜகோபுரத்தின் உட்புறம் அழகான மாடத்தில் வலது புறம் பைரவரும் இடதுபுறம் சூரியனும் அருள்பாலிக்கின்றனர். பிரதோஷம் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டு பலன் பெற வேண்டிய ஆலயம் இது.