வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது.கடந்த ஜூலை 30ல் கொடியேற்றத்துடன் துவங்கிய 13 நாள் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர் சிறப்பு வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. கடந்த ஆக.5ம் தேதி இரவு சவுந்தரவள்ளி தாயார் சன்னதியில் திருக்கல்யாணம் நடந்தது.
தேரோட்டம்:திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9வது நாள் மாலையில் இங்கு தேரோட்டம் நடப்பது வழக்கம். ஆனால் நேற்று சந்திர கிரகணம் ஏற்பட்டதால் மாலை நேரத்திற்கு பதிலாக காலையில் தேரோட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தத்தால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. சன்னதியில் இருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்து வர முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. மதியம் 12:50 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. பின்னர் சுவாமி தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி முடிந்து, சந்திர கிரகணம் காரணமாக நேற்று மதியமே கோயில் நடை சாத்தப்பட்டது.