பதிவு செய்த நாள்
08
ஆக
2017
02:08
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சவுண்டம்மன் கோவில்களில், காயத்ரி ஹோமத்துடன் பூணூல் திருவிழா நடந்தது. ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, குமாரபாளையம் - சேலம் பிரதான சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்களில் பூணூல் திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சேலம் பிரதான சாலை, சவுண்டம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, காயத்ரி ஹோமம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் மற்றும் பூணூல் வழங்கப்பட்டது. பக்தர்கள் அம்மனை வணங்கி, பூணூல் அணிந்து கொண்டனர். காவேரி நகரில், ஆனந்தகாயத்ரி வீரகுமாரர்கள் மற்றும் இதர வீரகுமாரர்கள் அமைப்பின் சார்பில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்தனர்.