பதிவு செய்த நாள்
08
ஆக
2017
03:08
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி... என்று திருவாசகத்தில் பாடிப் பரவுகிறார் மாணிக்கவாசகர். அப்படிப்பட்ட ஆதிசிவனின் அருளை நாம் முழுமையாகப் பெற உதவும் முக்கியமான விரத நாளே சிவராத்திரி. எண் குணத்தானாகிய பரமேஸ்வரனின் பக்தியில் திளைத்து வரம் பெறுவதற்கு எட்டு விரதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை: சோம வார விரதம், உமா மகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், கல்யாண விரதம், பாசுபத விரதம், அஷ்ட விரதம், கேதார கவுரி விரதம், மகா சிவராத்திரி விரதம். அனுஷ்டிக்கத்தக்க சிவ விரதங்கள் அனைத்துமே சிறப்பானவை என்றாலும், அபரிமிதமான பலன்களை அள்ளித் தரும் விரதமாக அனைத்து கோயில்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது, மாசியில் வரும் மகாசிவராத்திரியே.
இமைப்போதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
என்று சிவபுராணம் குறிப்பிடுகின்றது. வினாடி கூட பக்தர்களை விட்டு விலகாத சிவபெருமானுக்கு நன்றிக்கடனாக மாசி தேய்பிறை சதுர்த்தசியிலே அன்பர்கள் விழித்திருந்து ஆராதனை செய்ய வேண்டியது அவசியமல்லவா?
மாதமோ மாசி! இதில்
திருநீறு பூசி - அந்த
மகாதேவனைப் பூசி! - அவன்
அடியார்களை நேசி! - பன்னிரண்டு
திருமுறைகளை வாசி - உடனே
கிடைக்கும் அவன் ஆசி!
சிவம் என்றால், மங்கலம் என்று பொருள். இவ்விரதச் சிறப்பை நந்திதேவர் மூலம் அறிந்து சூரியன், மன்மதன், அக்னி, எமன், இந்திரன், குபேரன், முருகப்பெருமான் முதலானோர் பக்திப் பாங்குடன் அனுசரித்து பரமேஸ்வரனின் கிருபைக்கு ஆளானார்கள் என்று பகிர்கின்றன புராணங்கள்.
இந்நாள் எமைக் கண்டவர், நோற்றவர், பூஜை புரிந்தவர் நற்கதி அடைவர் என்று சிவனாரே உறுதி அளித்துள்ளார் என்று உரைக்கின்றது, வரத பண்டிதம் என்னும் நூல். காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின் என்று தேவாரம் குறிப்பிடுவதற்கிணங்க மண்ணில் நல்லவண்ணம் வாழ, இவ்விரதத்தை முறையாக, முழுமையாக அனுஷ்டிக்க வேண்டியது அவசியம். சிவ நாமத்தை ஒருமைப்பட்ட எண்ணத்துடன் உச்சரித்தும், கோயில்களில் நான்கு கால தரிசனம் கண்டும், அன்பர்களுக்கு பிரசாதம் அளித்தும், திருநீறு பூசியும் திருமுறை பாடியும் இந்நோன்பை ஏற்றால் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்கின்றது புராணம்.
பிரம்ம தேவரை சரஸ்வதி கணவராகப் பெற்றதும், திருமால் சக்ராயுதம் பெற்றதும் இவ்விரதத்தை ஏற்றே என்கின்றன இதிகாசங்கள்.
சிவராத்திரி எவ்வாறு தோன்றியது? என ஏடுகளைப் புரட்டினால் பலவிதமான கதைகள் கிடைத்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவை கீழ்க்காணும் சில நிகழ்வுகளே!
அமுதத்தை விண்ணுலகத்தினருக்கு அளித்து, ஆலகால விஷத்தை தான் உண்ட தியாகத்தின் திருவுருவம்தான் சிவபெருமான். அகிலத்துக்கே மூலமான பரம்பொருளுக்கு முடிவு நேர்ந்து விடுமோ என்று எண்ணி, அஞ்சி நடுங்கி உருத்திரர், நாரணர், விண்ணோர், வேந்தர், இயக்கர், சித்தர், மருத்துவர், பூதர், யோகியர், தேவர்கள் அனைவரும் ஒருசேர, நம சிவாய வாழ்க! நாதன்தான் வாழ்க! என்று அழுதும், தொழுதும், பாடியும், பரவியும் பரமேஸ்வரனைப் பணிந்தனர். அந்த வேளையே சிவராத்திரி யாக சிறப்புப் பெற்றது.
யுக முடிவில் பிரளயம் உண்டாகி அனைத்தும் அழிந்துபோக, சிவனும் சக்தியும் மட்டுமே இருந்தனர். அப்போது புவனத்தை மீண்டும் புரந்தருள, அம்பிகை நான்கு காலங்களும் நாதனைத் தொழுதாள். அந்த நற்பொழுதே சிவராத்திரி ஆனது.
லிங்கோத்பவராக, ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதி வடிவாக, விசுவரூப அனில் உருவில் சிவபெருமான் விளங்கியபோது பிரம்மாவும், திருமாலும் இறைவனின் அடி முடி காணாது அலமந்தனர். மாலறியா, நான்முகனும் காணா மலை வடிவம் ஆனார் மகாதேவன். அந்நிகழ்வே சிவராத்திரி விரதமாகத் தோற்றம் பெற்றது.
இப்படி, லிங்க புராணம், ஸ்காந்தம், சிவமகாபுராணம் போன்றவை சிவராத்திரி குறித்து சித்திரிக்கின்றன. இதன் வழி நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது, இது பேரின்ப இரவு! இதில் நாம் பெற வேண்டியது சிவபெருமானின் உறவு! ஆதிசிவனே அனைத்துக்கும் மூலம்! அவனருளே இந்த ஞாலம்! என்பதுதான்.
பால பருவம், இளமைப் பருவம், நடு வயது, முதுமை என நான்கு காலமும் நாம் நன்றாக வாழ வேண்டுமென்றுதான் சிவராத்திரிப்போதில் நான்கு காலம் அபிஷேகம், ஆராதனை, நிவேதனம், வழிபாடுகள், பாராயணம், பஜனைகள். மாலை 6 முதல் 9 மணி வரை முதல் ஜாம பூஜை. முதல் காலத்தில் பஞ்சாட்சரப் பெருமானுக்கு பஞ்சகவ்யத்தால் அபிஷேகம். வில்வம், தாமரை மலரால் முதல் ஜாம அர்ச்சனை நடைபெறும். இரவு 9 முதல் 12 மணி வரை இரண்டாம் காலத்தில் தேன், சர்க்கரை, பால், நெய், வாழைப்பழம் சேர்ந்த பஞ்சாமிர்த அபிஷேகம் சண்பகம், துளசியால் அர்ச்சனை.
நடுநிசி 12 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் காலத்தில் தேனால் அபிஷேகமும், செங்கழு நீர், அருகம்புல்லால் அர்ச்சனையும் நிகழும். அதி காலை 3 மணி முதல் வைகறை நேரம் 6 வரை கருப்பஞ்சாற்றால் அபிஷேகமும், நீலோத்பலம், விளா இலைகளால் அர்ச்சனையும் நிகழ்த்தப்பெறும்.
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்!
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்!
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்!
தொழுகையர்! அழுகையர்! துவள்கையர் ஒருபால்!
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்!
என்று திருப்பள்ளி எழுச்சியில் மாணிக்கவாசகர் தெரிவிப்பதுபோல் விதவிதமான வழிபாட்டில் பக்தர்கள் உள்ளம் ஒன்றி ஈடுபடுவதை அனைத்து, சிவன் கோயில்களிலும் கண்டு மகிழலாம்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமசிவாயவே!
என்று தேவாரம் தெரிவிக்கின்றது. எந்தை பேர் ஆயிரம் அன்றே! நூறும் அன்றே! வெறும் ஐந்தெழுத்தே! என்று ராமலிங்க அடிகளார் திருஅருட்பாவில் பகர்கின்றார். அகம் உருகிச் சொல்வதற்கு எளிதாக ஐந்தே எழுத்துக்களில் சிவபிரானின் திருநாமம் அமைந்துள்ளது. அந்த ஐந்தெழுத்து மந்திரத்தை சிவராத்திரியில் விழித்திருந்து ஓதினால், இனி வாழ்வில் இருட்டே ஏற்படாது என விளங்கிக் கொள்ளலாம்.