வில்லியனுார் : தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. வீட்டு வாசல் முன் ரோட்டில் ஆடுகள் பலியிடப்படும் ரத்தத்தின் மீது தேர் செல்வது வழக்கம். நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் கோவில் வாசலில் 5 ஆடுகள் பலியிடப்பட்டன. அதனை தொடர்ந்து, ஒவ்வொரு வீடாக சுமார் 750க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப் பட்டன. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இக் கோவிலில் அம்மனுக்கு படையலிட்ட ரத்த சோறு சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இவ்வாறு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், கோவிலில் பொங்கலிட்டு, நேர்த்திக் கடனாக ஆடு பலியிட்டனர். காலை 10:30 மணியளவில் துவங்கிய, தேரோட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.