பதிவு செய்த நாள்
10
ஆக
2017
01:08
ஐதராபாத்: கற்காலத்தின்போது, 4,000 ஆண்டுகளுக்கு முன், எலும்புகளில் இருந்து செய்யப்பட்ட நகைகளை, தெலுங்கானா மாநிலத்தில், தொல்லியல் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் ஐதராபாத்துக்கு அருகே நடத்தப் பட்ட தொல்லியல் ஆய்வுகளில், பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து, தெலுங்கானா தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை இயக்குனர், என்.ஆர்.விசாலாட்சி கூறியதாவது: ஐதராபாத்தை அடுத்துள்ள சில பகுதிகளில், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர்; அப்போது, கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்து உள்ளன. எலும்பால் செய்யப்பட்ட பல்வேறு ஆபரணங்கள் கிடைத்துள்ளன. கடந்த, 4,000 ஆண்டுகளுக்கு முன், இவ்வாறு ஒரே அளவிலும், எடையிலும் எலும்புகளை செதுக்கி, ஆபரணங்கள் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தது, ஆச்சரியமளிக்கிறது. இதைத் தவிர, மிகவும் அபூர்வமான, ’கேப்ஸ்டோன்’ எனப்படும், தட்டைக் கல் கிடைத்துள்ளது. மனித உருவங்களை பிரதிபலிக்கும் வகையில், இவை இருந்தன. இவை, எந்த ஆண்டில் தயாரிக்கப்பட்டன என்பதை கணக்கிடும் பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.