பதிவு செய்த நாள்
28
நவ
2011
12:11
திருமலையில் வெங்கடேச பெருமாள் கோவில் எதிரில் அமைந்திருந்த, பழமை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபத்தை இடித்து அப்புறப்படுத்தியது, "சரித்திர கொலை. அந்த இடத்தில் மீண்டும் மண்டபம் எழுப்பாவிட்டால், திருமலைக்கு பாத யாத்திரை செல்ல தயாராக உள்ளதாக, ஸ்ரீதிரிதண்டி ஸ்ரீமந் நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் தெரிவித்துள்ளார். வரலாற்றில், தொன்று தொட்டு நிலைத்துள்ள பழமை வாய்ந்த கட்டடங்களை, "அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடித்துத் தரை மட்டமாக்கினார்கள். திருமலையில் ஆயிரங்கால் மண்டபம் இடிந்ததற்கு நாடு முழுவதிலும் உள்ள மடாதிபதிகள், ஆன்மிக பக்தர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு உருவானது. அதை அடுத்து, அதே இடத்தில் புதிதாக மண்டபம் கட்டப்படும் என, அப்போது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு, அறிக்கையோடு நின்று விட்டது என, சின்ன ஜீயர் சுவாமி குறை கூறியுள்ளார். ஆந்திராவில் வாரங்கல் நகரில், தர்ம சம்மேளனம் நிகழ்ச்சியில் உரையாற்றிய ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமி மேலும் கூறியதாவது: திருமலையில், 2003ம் ஆண்டு இடிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை மீண்டும் கட்டி முடிக்க வேண்டுமென, மாநில ஐகோர்ட் அளித்த தீர்ப்பை, மாநில அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை. கட்டப்படும் என அறிவித்து, ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இன்னும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கோவில்களின் பவித்ர தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தி, தெய்வங்களை வியாபாரப் பொருளாக உபயோகப்படுத்தும் விதமாக, விற்பனை செய்து வருகின்றனர். புராதனக் கட்டடங்களை தேசிய சொத்துக்களாக பாதுகாக்கப்பட வேண்டுமே தவிர, அபிவிருத்தி பெயரால் கட்டடங்களை இடிக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. கோவில்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நிர்வாகத்தின் கடமை, இருப்பதை பொறுப்பாக கண்காணித்து வரவேண்டுமே தவிர, கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் அதிகாரம் இவர்களுக்கு அளிக்கப்படவில்லை. புண்ணிய சேத்திரமான திருமலையில், ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்ட இடத்தில், மீண்டும் புதியதாக மண்டபம் கட்டப்படாவிட்டால், ஒரு லட்சம் பக்தர்களுடன் கீழ் திருப்பதி மலை அடிவாரத்திலிருந்து திருமலை வெங்கடேச பெருமாள் சன்னிதி வரை, பாத யாத்திரை மேற்கொள்வேன். இவ்வாறு சின்ன ஜீயர் கூறினார்.