பதிவு செய்த நாள்
26
ஆக
2017
12:08
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் முழுவதும், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். செஞ்சியில் உள்ள சிறுகடம் பூர், பெரியகரம், பீரங்கிமேடு, சக்கராபுரம், என்.ஆர்.பேட்டை உள்ளிட்ட 40 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். செஞ்சி செல்வ விநாயகர் கோவில், சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. சிறுகடம்பூர் சக்தி விநாயகர் கோவிலில் 29வது ஆண்டாக 21 அடி விநாயகர் பிரதிஷ்டை செய்திருந்தனர். பெரியகரம் ஜோதி விநாயகர் கோவில் உட்பட பல்வேறு இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
மேல்மலையனுார் தாலுகா, அவலுார்பேட்டையில் முருங்கை மரத்தெரு ,வாணியர் தெரு காலனி உள்ளிட்ட 35 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. இதே போல் வளத்தி காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் 71 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யப்பட்டது. திண்டிவனம் ரயிலடி விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதே போல் திண்டிவனம், ரோஷணை, பூதேரி, கிடங்கல், செஞ்சி ரோடு உள்ளிட்ட 57 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திண்டிவனம், ஒலக் கூர், வெள்ளிமேடுப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் 250 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மரக்காணம் ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு, அனுமந்தை, மரக்காணம், கந்தாடு, நல்லா ளம், எண்டியூர் உள்பட 95 கிராமங்களில், 150 இடங்களில் வினாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சங்கராபுரம் கடைவீதி அரசமரத்தடி சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் செய்து, சந்தன காப்பு நடந்தது. சங்கராபுரம் கடைவீதி, திரவுபதியம்மன் கோவில், சன்னதி தெரு, மீனவர் தெரு, பூட்டை ரோடு முருகன் கோவில் வளாகம், பொய்குனம் ரோடு, சங்கராபுரம் காலனி, காட்டுவனஞ்சூர் காலனி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தியாகதுருகம் நகரில் பஸ்நிலையம், மார்க்கெட், புக்குளம் பஸ்நிறுத்தம், சந்தைமேடு, காந்திநகர், கஸ்துாரிபாய் நகர் உள்பட 12 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி பகுதி யில் 85 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி காந்தி ரோடில் உள்ள சக்திவிநாயகர் கோவிலில் விநாயகர் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. அங்கு பிரதிஷ்டை செய்துள்ள 12 அடி விநாயகருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.
ரிஷிவந்தியம் சுற்று வட்டார பகுதியில் 60 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதேபோல், பகண்டை கூட்ரோடு பகுதியில் 40 சிலைகளை பிரதிஷ்டை செய்தனர்.
திருக்கோவிலுார் ஐந்துமுனை சந்திப்பு‚ ஏரிக்கரை மூலை‚ மார்க்கெட் வீதி உள்ளிட்ட இடங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டது. இதனை ஆர்வமுடன் மக்கள் வாங்கிச் சென்றனர். விநாயகர் வழிபாட்டிற்கு தேவையான குடை‚ எருக்கம்பூ மாலை‚ பழங்களின் விற்பனையும் அமோகமாக இருந்தது.