பதிவு செய்த நாள்
30
ஆக
2017
12:08
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் ஆண்டுத் திருவிழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லுார்து என்றழைக்கப்படும், பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டு திருவிழா, ஆக., 29ல் துவங்கி, செப்., 8ம் தேதி வரை நடைபெறும். இவ்வாண்டுக்கான திருவிழா, நேற்று துவங்கியது. மாலை, 5:30 மணிக்கு, தேவாலய முகப்பில் இருந்து கொடி பவனி புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, இரவு, 7:00 மணிக்கு தேவாலயம் வந்தடைந்தது. தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்த பின், லட்சக்கணக்கான பக்தர்கள், மரியே வாழ்க என கோஷம் எழுப்ப, கொடியேற்றம் நடந்தது. செப்., 7ல் இரவு, 8:00 மணிக்கு திருத்தேர் பவனி நடைபெறுகிறது. 8ல் மாதா பிறந்த நாள் விழா, விண்மீன் தேவாலயத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, விழா நிறைவடைகிறது.