பதிவு செய்த நாள்
30
ஆக
2017
12:08
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று மேளம் தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 25ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
ஐந்தாம் நாளான நேற்று, இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் துவங்கியது. காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, பட்டேல் சாலை, பழைய சாராய ஆலை வழியாக கடற்கரைக்கு மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. இரவு 7:00 மணியளவில் கடற்கரை சாலை பழைய கோர்ட் அருகே ஊர்வலம் வந்தடைந்தது. அங்கு, ராட்சத கிரேன் மூலம் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. 200க்கும் மேற்பட்ட பெரிய விநாயகர் சிலைகளும், இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறிய சிலைகள் கரைக்கப்பட்டன. சிலைகளை கடலுக்கு கொண்டு செல்ல,கடற்கரை பகுதியில் மணல் கொட்டி வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்து.