பதிவு செய்த நாள்
02
செப்
2017
12:09
பூலோக கயிலை என பக்தர்களால் கருதி போற்றப்படும் சதுரகிரி மலை தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் மலைவாச சிவஸ்தலமாக, தமிழகத்தில் அதிக உயரத்தில் அமைந்துள்ள ஆன்மிக ஸ்தலமாக விளங்கி வருகிறது.
புராணகாலங்களில் வாழ்ந்த பிரசித்தி பெற்ற சித்தர்கள் பலர் வாழ்ந்து அடைக்கலமான மலை என்பதால் சித்தர்மலை என்றும், பல்வேறு மூலிகைகள் நிறைந்த புனித மலை என்பதால் மேகசஞ்சீவி மலை எனவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. புனித மலையாகவும் கருதப்படுகிறது. இது ஆன்மிக ஸ்தலம் என்பதை தவிர தமிழகத்தில் அதிக மூலிகைகளை உள்ளடக்கிய முதல் மூலிகை வனமாகவும், சாம்பல்நிற அணில் சரணாலயம் என்ற மற்ற இரு வேறு வகைகளிலும் பிரசித்தி பெற்றது.
மதுரை, விருதுநகர் மாவட்டங்களை பிரிக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் 4 மலைகளுக்கு மத்தியில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்கு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்கள் உள்ளன. அடிவாரமான தாணிப்பாறையிலிருந்து 7 கி. மீ., தொலைவில் மலை உச்சியில் இவை அமைந்துள்ளன. இதற்கான மலைப்பாதை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. இக்கோயிலில் ஒவ்வொரு அமாவாசையும், பவுர்ணமியும் விஷேச நாட்களாகும். ஆனாலும் பக்தர்கள் நீண்ட ஆண்டுகளாக இக்கோயிலுக்கு ஆண்டின் எல்லா நாட்களிலும் சென்று வந்தனர். கடந்த 2015ல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் மலைக்கு சென்ற பக்தர்கள் 9 பேர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதற்கு பிறகு எல்லா நாட்களிலும் மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அமாவாசை, மற்றும் பவுர்ணமி நாட்களை யொட்டி தலா 4 நாட்கள் வீதம் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சோதனை மேல் சோதனை: பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த மலைக்கு சென்றுவந்தால் தாங்கள் குடும்பத்தினரின் சங்கடங்கள் தீரும் என்ற நம்பிக்கையில் தமிழகம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் மலைக்கு சென்று வருகின்றனர். இப்படி வரும் பக்தர்களுக்கு அடிவாரத்திலிருந்தே துவங்குகிறது சோதனை மேல் சோதனை. சென்னை, காஞ்சிபுரம் உட்பட வடமாவட்டங்களிலிருந்தும், சேலம், ஈரோடு போன்ற மத்திய மாவட்டங்களிலிருந்தும் மிக அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் மதுரையிலிருந்து நேரடியாக மலைக்கு வருவதற்கு ஒரு பஸ்கூட கிடையாது. அங்கிருந்து செங்கோட்டை, ராஜபாளையம் பஸ்களில் வந்து கிருஷ்ணன்கோவிலில் இறங்குகின்றனர். பின்னர் அங்கிருந்து டவுண்பஸ்கள் மூலம் வத்திராயிருப்பு வந்து, அங்கிருந்து ஷேர் ஆட்டோக்களில் மலையடிவாரம் செல்கின்றனர். முதல்நாளில் துவங்கும் அவர்களது பயணம் 15 மணி நேரத்திற்கும் மேலாகி மறுநாள் காலையில் அடிவாரத்தில் முடிகிறது. இதற்கிடையே ஆங்காங்கு இறங்கி பல பஸ்கள், ஆட்டோ என மாறி பயணித்து இறுதியில் அடிவாரத்தை அடையும்போதே சோர்வடைந்து விடுகின்றனர். இதன்பிறகு மலைப்பாதையில் வேறு 5 மணிநேரம் கடினமான நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல தென் மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்களும் ஒவ்வொரு ஊராக இறங்கி, ஏறி இறுதியாக களைத்துப்போய் அடிவாரம் வந்து சேர்கின்றனர். இவர்கள் வந்து செல்ல வசதியாக மலைப்பாதை திறந்திருக்கும் நாட்களில் நேரடி பஸ்வசதி செய்யலாம். இப்பிரச்னையால் பெரும்பாலான பக்தர்கள் வேன், கார், இருகர வாகனங்களில் வந்து சேர்கின்றனர். இவர்கள் வாகனங்களை நிறுத்த காப்பகம் கிடையாது. தனியார் காப்பகங்களில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
கழிப்பறை பிரச்னை: நீண்ட தொலைவிலிருந்து வரும் பக்தர்கள் அதிகாலையில் அடிவாரம் வந்து இறங்கி அதன்பின் காலைக்கடன்களை முடித்து உணவருந்தி தாங்களை சிறிது நேரம் தயார் செய்து கொண்டு அதன்பின்னரே மலையேற துவங்குகின்றனர். அவர்களுக்கு போதிய கழிப்பறை வசதிகள் கிடையாது. இரு இடங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் தண்ணீர் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. சரிவர பராமரிப்பது கிடையாது. இவைகள் இருந்தும் பக்தர்களுக்கு பயனின்றி உள்ளன. ஆண்கள் ஆங்காங்கு உள்ள செடி,கொடி மறைவில் ஒதுங்கி விடுகின்றனர். பெண்கள் அதற்கும் வழியின்றி பரிதவிக்கின்றனர். இப்படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திறந்த வெளியை நாடுவதால் பெரும் சுகாதாரக்கேடாக உள்ளது. இதேபோல மலையில் உள்ள கோயில் வளாகத்திலும் 3 இடங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டும் தண்ணீர் வசதி செய்யப்படாததால் காட்சிப்பொருளாகவே உள்ளன. இங்கு வரும் பக்தர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையே கழிப்பறைதான் . இம்மலையை பொறுத்தவரை எங்கு பார்த்தாலும் அன்னதான மடங்கள் உள்ளன. பக்தர்களுக்கு வித விதமாக அன்னதானம் போடப்படுகிறது. பக்தர்கள் உணவுக்காக ஒருபைசாக்கூட செலவழிக்க தேவையில்லை. போதும், போதும் என்கிற அளவிற்கு உணவு கிடைத்தும், கழிப்பிட வசதியில்லாததால் பல பக்தர்கள் உணவு உண்ணாமல் பசியுடன் உடனடியாக திரும்பி விடுகின்றனர். அந்த அளவிற்கு கழிப்பறை பிரச்னை பக்தர்களை பெரும்பாடு படுத்துகிறது. பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு அறநிலையத்துறையோ, வனத்துறையோ, ஊராட்சி நிர்வாகங்களோ இன்றுவரை தீர்வுகாண முயற்சிக்கவில்லை.
தண்ணீர் ... தண்ணீர்: மலையிலும் அடிவாரத்திலும் மழைக்காலங்களை பொறுத்தவரை ஆறு, ஓடைகளில் வரும் நீரை கொண்டு பக்தர்கள் சமாளித்துக் கொள்கின்றனர். ஆனால் வறட்சியான காலங்களில் மலையிலும், அடிவாரத்திலும் நீர் இன்றி பக்தர்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். குடிப்பதற்கு கூட சொட்டுத்தண்ணீர் இன்றி தற்போது நடந்து முடிந்த ஆடி அமாவாசை விழாவில் சொல்ல முடியாத சிரமங்களை பக்தர்கள் சந்தித்தனர். கடைகளில் ஒருலிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த அளவிற்கு கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. திருவிழா நேரத்தில் வரும் பல லட்சம் பக்தர்களுக்கு தேவையான அளவு தண்ணீர் தேக்கி வைக்கவோ, அதற்கான நீர் ஆதாரங்களை ஏற்படுத்தவோ அறநிலையத்துறை தகுந்த ஏற்பாடுகளை செய்யவில்லை . பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு குறையாமல் தொடர்ந்து மலையேறினால்தான் உச்சியில் உள்ள கோயிலை அடைய முடியும். 7 கி.மீ.,துாரம் நடந்தே செல்லும் பக்தர்கள் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் ஆறுகளையும், ஓடைகளையும் ஆபத்தான முறையில் கடந்து செல்ல வேண்டியுள்ளது. பல இடங்களில் ஆறுகளுக்குள் தண்ணீரில் இறங்கி கடந்து செல்கின்றனர். இங்கு மழை நேரங்களில் தண்ணீர் அதிகளவில் வந்தால் பக்தர்கள் அந்த இடங்களை கடந்து செல்ல முடிவதில்லை. கீழே இறங்கிச் செல்லவும் முடியாமல், மேலே ஏறிச்செல்லவும் முடியாமல் பாதிவழியிலேயே சிக்கி கொள்கின்றனர். பின்னர் தீயணைப்பு படையினர், மீட்புக்குழுவினர் வந்து அவர்களை கயிறு கட்டி அழைத்து வரவேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஒவ்வொரு முறையும் இச்சம்பவம் நடக்கிறது. கடந்த 2015ல் ஆற்றில் நீரில் இறங்கி கடக்க முயன்ற 9 பக்தர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்று பலியாக்கியது. பல ஆண்டுகளாக தொடரும் இந்த ஆபத்திற்கு வனத்துறையினர் இன்னும் முடிவு கட்டியபாடில்லை. ஆபத்தான ஆற்றுப்பாதைகளில் மேம்பாலங்கள் அமைத்தால் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதைக்கூட பக்தர்கள் நன்கொடையாக செய்து தர தயாராக உள்ளனர். ஆனால் வனத்துறை ஆர்வம் காட்டாததால் ஆபத்து தொடர்கிறது. இதனால் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது.
எங்கும் ஆக்கிரமிப்பு: இம்மலைக்கு இயக்கப்படும் பஸ்கள், திருவிழா நேரத்தில் இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் அனைத்தும் மலையடிவாரமான தாணிப்பாறைக்கு முன்பாக வண்டிப்பண்ணை என்ற இடம் வரை வந்து செல்லும். பல ஏக்கர் பரப்பளவுள்ள அங்குதான் கோயில் தோன்றிய காலம் முதல் தற்காலிக பஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. பஸ் வசதியில்லாத காலங்களில் மாட்டு வண்டிகளில் வருபவர்கள் அந்த இடத்தில்தான் கூடாரம் அமைத்து முகாமிடுவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக அந்த இடமும், அதை சுற்றிய பல ஏக்கர் பரப்பளவுள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களும் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. இப்படி மலையை சுற்றி 100 ஏக்கருக்கு மேல் இருந்த மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் அனைத்தும் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் அடிவாரத்திற்கு 2 கி.மீ.,துரத்திற்கு முன்பே வானங்கள் நிறுத்தப்பட்டு விடுகிறது. அங்கிருந்து பக்தர்கள் தாங்கள் மூட்டை, முடிச்சுகளை சுமந்தபடி கால்நடையாக அடிவாரம் செல்கின்றனர். ஆடி அமாவாசை, தை, அமாவாசை, சிவாரத்திரி போன்ற முக்கிய திருவிழா நாட்களில் அடிவாரம் செல்ல முடியாமல் 7 கி. மீ., துாரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு விடுவதால் அங்கிருந்து பக்தர்கள் நடந்து செல்ல வேண்டிய துயரத்திற்கு தள்ளப்படுகின்றனர். லட்கணக்கான பக்தர்கள் ரோட்டில் நடந்து செல்வதால் அடிவாரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பக்தர்கள் சற்று ஓய்வு எடுத்துச் செல்லும் இடத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகள் அமைத்து வாடகைக்கு விடுவதால் இடநெருக்கடியால் பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களால் இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழாவிற்கு வந்த பல லட்சம் பக்தர்கள் பெரிய அளவில் துயரத்திற்கு ஆளாகியும் அதிகாரிகள் இதை ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆக்கிரமிப்புகளையும் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
வெண்ணெய் இருந்தும் நெய்க்கு அலைச்சல்: இதுமட்டுமின்றி சிறப்பு பஸ்கள் வந்து செல்வதற்கு கூட இடமின்றி ஒவ்வொரு ஆண்டும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், வருவாய், போலீஸ் துறையினர் தனியார் இட உரிமையாளர்களை சந்தித்து, தற்காலிக பஸ்டாண்ட் அமைப்பதற்கு இடம் தந்து உதவுமாறு கெஞ்சுகின்றனர். அவர்களிடம் வாடகை கொடுத்து இடம்பிடித்து அங்கிருந்து சிறப்பு பஸ்களை இயக்குகின்றனர். அரசுக்கு சொந்தமான நுாறு ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பது தெரிந்தும் அவற்றை கையகப்படுத்தாமல் அலட்சியமாக இருந்துவிட்டு ஓரிரு ஏக்கர் நிலங்களை கூட வாடகைக்கு பிடிக்க அலையும் அதிகாரிகளின் போக்கு வேடிக்கையாக உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவது போல உள்ளது. இங்குள்ள மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள் விவசாயிகளின் மேல்மகசூல் உரிமைக்காக அரசால் வழங்கப்பட்டது. ப
யனாளிகள் அந்த நிலத்தில் விளையும் பயிர்களின் மகசூலை மட்டும் அனுபவித்துக் கொள்ள உரிமை உண்டு. மற்றபடி அந்த நிலத்தை சொந்தம் கொண்டாடவோ, விற்பனை, தானம் செய்வதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் அந்த மகசூல் உரிமை பெற்ற பலர் அதை தாங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா எனக்கூறி முறைகேடாக மற்றவர்களுக்கு விற்பனை செய்து விட்டனர். இன்னும் தொடர்ந்து பலர் விற்பனையும் செய்து வருகின்றனர். சிலர் அதிகாரிகளால் அகற்ற முடியாதபடி அந்த இடத்தில் கோயில் கட்டியும், சிலர் அன்னதானம் செய்வதாகவும் கூறிக்கொண்டு கடைகள் அமைத்து வாடகைக்கு விடவும், வாகனக்காப்பகம், நன்கொடைவசூல் என பல்வேறு வழிகளில் லட்கணக்கில் லாபம் பார்த்து வருகின்றனர். கடந்த 2ஆண்டுகளுக்கு முன் இங்கு அரசு ஒரு கழிப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியது. ஆனால் கட்டுவதற்கு இடமில்லை. வருவாய்த்துறை ஆவணங்களை கையில் எடுத்து அப்போதைய கலெக்டராக இருந்த ராஜாராம் நேரடியாக களத்தில் இறங்கி ஒரு சர்வேயரைப்போல டேப் ரோலை பிடித்து ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு கொடுத்து கழிப்பறையை கட்ட வைத்தார். கலெக்டரே களத்தில் இறங்கியதால் அச்சத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் சற்று ஒதுங்கிக் கொண்டனர். இதனால் அங்கு புதிய கழிப்பறை கட்டப்பட்டது. அதேபோல இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழாவிற்கு 2 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை அதிகாரிகள் அதிரடியாக களத்தில் இறங்கி மீட்டனர். இப்படி அதிரடி நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே மீட்கலாம் என்பதற்கு இந்த இரு சம்பவங்களும் ஒரு சான்றாகும். இதை பின்தொடர்ந்து அடிவாரத்தில் உள்ள அனைத்து இடங்களையும் அரசு மீட்டு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
ஆண்டு முழுவதும் வருமானம்: ராமராஜ்(மகாராஜபுரம்):துன்பத்தை துடைப்பதற்காக இங்கு வரும் பக்தர்கள் இங்கும் துன்பப்படுவதை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது. ஒரு அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியாத அளவிற்கு அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன. ஒருநாள் அன்னதானம் வழங்கிவிட்டு ஆண்டு முழுவதும் சிலர் நல்ல வருமானம் பார்க்கின்றனர். இங்கு பக்தர்கள் படும் துன்பத்திற்கும், அரசு பக்தர்களுக்காக ஒரு வசதியையும் ஏற்படுத்த முடியாமல் இருப்பதற்கும் மிக முக்கிய காரணம் இங்குள்ள ஆக்கிரமிப்புகள்தான். இவற்றை அகற்றினாலே போதும் பக்தர்களின் பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து விடும். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் பல லட்சம் பக்தர்களின் ஒட்டுமொத்த நலனும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது.
தேவையாகுது மருத்துவ குழு: பாண்டியன்(வத்திராயிருப்பு):ஒவ்வொரு மழையின்போதும் மலையேறிச்செல்லும் பக்தர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தனை உயிரிழப்பிற்கு பிறகும் ஒரு பாலம் கட்டுவதற்கு கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கூடாதா. பக்தர்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு பக்தர் மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் காரணமாக மலையில் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு தீர்வாக மருத்துவக்குழுவை கூட ஏற்படுத்துவதில்லை. திருவிழா நேரத்தில் மட்டும் முகாமிட்டுவிட்டுதிரும்பி விடுகின்றனர். மாரடைப்பு, ரத்த அழுத்தத்தை தீர்க்கும் கருவிகளுடன் மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துயரத்தில் பெண்கள்: ரவிக்குமார்(கூமாப்பட்டி):மலையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை. ஒரு மழைவந்தால்கூட ஒதுங்குவதற்கு அருகில் உள்ள அன்னதான மடங்களைத்தான் பக்தர்கள் நாடவேண்டியுள்ளது. அறநிலையத்துறையினர் கட்டியுள்ள மடங்களில் அனுமதி பெற்று செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்தவெளி மடங்களை கூடுதலாக கட்ட வேண்டும். மலையில் கழிப்பறைகள் இன்றி பெண்கள் மிகுந்த துன்பத்திற்குள்ளாகின்றனர். எந் நேரமும் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கூடுதலாக கழிப்பறைகள் கட்டலாம். - -ஜி.வி.சரவணன்.