பதிவு செய்த நாள்
02
செப்
2017
02:09
போபால்: மத்திய பிரதேசத்தில், ஹனுமன் கோவில் கட்ட, முஸ்லிம் குடும்பத்தினர் நிலத்தை தானமாக தந்து, மதநல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்குகின்றனர். ம.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். ஷியோபூர் நகர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர், ஜவேத் அன்சாரி, 34. அந்த கிராமத்தில் உள்ள ஹனுமன் கோவிலுக்கு அருகே, இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக, ஆயிரத்து, 905 சதுர அடி நிலம் உள்ளது. ஹனுமன் கோவிலை விரிவாக்கும் நடவடிக்கையை, நிர்வாகம் மேற்கொண்டது. இதற்கு, கூடுதல் நிலம் தேவைப்பட்டது. அருகில் இருந்த நிலம், முஸ்லிம் குடும்பத்திற்கு சொந்தமானது என்பதால், அதை கேட்க, கோவில் நிர்வாகத்தினர் தயக்கம் காட்டினர். இந்த தகவல் தெரிய வந்ததும், அன்சாரி, தானாகவே முன் வந்து, தன் குடும்பத்தினரின் நிலத்தை, கோவிலுக்கு தானமாக வழங்க முன் வந்தார். இதையடுத்து, மகிழ்ச்சிஅடைந்த கோவில் நிர்வாகத்தினர், அந்த நிலத்தை நன்கொடையாக பெற்று பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர்; நிலம், முறைப்படி, கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. இதுகுறித்து அன்சாரி கூறியதாவது: எங்கள் கிராமத்தில், அனைவரும் ஒன்றுமையுடன் வாழ்கிறோம். ஹனுமன் கோவில் கட்ட நிலம் தேவைப்படும் விபரம் தெரிய வந்ததும், மகிழ்ச்சியுடன் தானமாக வழங்கினேன். இதன் மூலம் ஹிந்து - முஸ்லிம் சமூகத்தினரிடையே நல்லுறவு மேம்படும்; மத நல்லிணக்கம் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.