திரைப்படத் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரும் கவியரசர் கண்ணதாசனும் சென்ற கார் விபத்துக்குள்ளாகி விட்டது. தேவருக்கு சிறிய காயம். கண்ணதாசன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் அப்போது நாத்திகர். மகாபெரியவர் மேல் பக்தியுடையவர் தேவர். அவரைத் தரிசித்து, விஷயத்தைச் சொன்னார். கண்ணதாசனுக்கு ரொம்ப அடிபட்டிருக்கிறதோ? என அக்கறையோடு விசாரித்தார் பெரியவர். கவிஞர் மீது அவர் காட்டிய கருணை, தேவர் மனத்தை உருக்கியது. திருநீறு கொடுத்த சுவாமிகள், இதைக் கண்ணதாசன் நெற்றியில் இட்டுவிடு! என்றார். கண்ணதாசன் நாத்திகராயிற்றே? தேவருக்குத் தயக்கம். பெரியவர் நகைத்தவாறே, அவன் நாட்டுக்கோட்டை செட்டியார் இல்லையா? சூரியனைச் சிலநேரம் மேகம் மறைப்பது போல் அவன் மனத்தை மறைத்திருந்த நாத்திக மேகம் இனி விலகி விடும். அவர்கள் குலம் ஆன்மிகத் திருப்பணிக்கென்றே தங்களை அர்ப்பணித்து கொண்ட குலம். வரதராஜப் பெருமாள் கோயில் திருப்பணியைச் செய்தவர்
கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. காமாட்சி கோயில் திருப்பணியைச் செய்தவர் அவன் அப்பா. தயங்காதே... நான் சொன்னபடி செய்! என்றார் சுவாமிகளின் உத்தரவை தேவர் சிரமேற்கொண்டார். மருத்துவமனை சென்று நினைவில்லாதிருந்த கண்ணதாசன் நெற்றியில் திருநீறு இட்டுவிட்டார். சிறிதுநேரத்தில் நினைவு வந்த கண்ணதாசன், தான் எப்படி இருக்கிறேன் என்று பார்ப்பதற்காக தேவரிடம் முகம்பார்க்கும் கண்ணாடி கேட்டார். தேவர் தயங்கியவாறே கண்ணாடியைக் காண்பித்தார். நெற்றியில் திருநீறு! தேவர் கண்ணதாசனிடம் நடந்தவற்றைச் சொன்னார். கவிஞர் கண்களில் கண்ணீர் தளும்பியது. சுவாமிகளின் அருள்தான் தன்னைக் காப்பாற்றியது என்பதை அவர் உள்ளம் உணர்ந்தது. ஆத்திகராக மாறினார் கண்ணதாசன். குணமானவுடன், பெரியவரைப் பற்றிய கவிதையோடு அவரைப் போய்ப் பார்த்தார்:
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு, திரு வாசகத்தின் உட்கருத்து... கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்... கவிதையைக் கேட்ட சுவாமிகள், இந்த புகழ்ச்சியெல்லாம் திருவண்ணாமலை சேஷாத்ரி ரப்பிரும்மத்திற்கல்லவோ பொருந்தும்! என்றார். அழகான உன் தமிழில், இந்து மதத்தின் பெருமைகள் பற்றி எழுது! எனக் கூறினார். அப்படி சுவாமிகளின் அருளாசியை பெற்று எழுதப்பட்ட நூல்தான் அர்த்தமுள்ள இந்துமதம். இத்தகைய உயர்ந்த ஆன்மிக நூலை எழுதிய நீங்கள் ஒரு காலத்தில் நாத்திகராக இருந்தீர்களே! என ஓர் அன்பர் பின்னாளில் கேட்டபோது, கண்ணதாசன் சொன்ன பதில் என்ன தெரியுமா? நான் நாத்திகனாக இருந்ததும் இறைவனின் சித்தமல்லாமல் வேறென்ன! எல்லாவற்றையும் இறைவனின் சித்தமாக பார்க்கும் பக்குவத்தை மகா பெரியவரின் அருள் அவரிடம் ஏற்படுத்தி விட்டது. - திருப்பூர் கிருஷ்ணன்