பதிவு செய்த நாள்
16
செப்
2017
11:09
கீழக்கரை, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 2005 மார்ச் 13 அன்று கோயில் திருப்பணி துவங்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
12 ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, வல்லபை ஐயப்பன் சன்னதி கோயில் வேலைப்பாடு நிறைந்த கருங்கற்கல்லில் தங்கமுலாம் பூசப்பட்ட கூரைகள் வேயப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 4, 2017ல் 33 அடி உயரமுள்ள தேக்குமரத்தால் ஆன கொடிமரம் தங்கமுலாம் பூசப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள வடிவமைப்பை போன்று இங்கு சுற்றுப்பிரகார மண்டப திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்கால யாகசாலை பூஜை செப்.11 முதல் முதல் துவங்கியது. ஆச்சாரிய வர்ணம், வாஸ்து, புண்ணியயாகம், கணபதி ஹோமம், பகவதி சேவா, சுதர்சன ஹோமம், பிரம்ம கலச பூஜை உள்ளிட்டவை நடந்தது. வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்ச மாதா சன்னதி புதிய பொலிவுடன் காணப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை காலை 9:30 மணியளவில் “சுவாமியே சரணம் ஐயப்பா” கோஷம் முழங்க, சபரிமலை சன்னிதானம் மகா கண்டரு ராஜூவரு தந்தரியால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தி இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் உள்ளிட்டவை நடந்தது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சுவாமி, வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர். தியான மண்டபம், அன்னதான கூடம், ஆன்மிக நுாலகம் திறந்து வைக்கப்பட்டது.