சபரிமலை, பம்பையில் தர்ப்பணம் நடத்த அனுமதி வழங்க முடியாது, என வனத்துறை சார்பில் தேவசம்போர்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பம்பை ஆற்றின் கரையில் பக்தர்கள் குளித்து விட்டு முன்னோர் நினைவாக தர்ப்பணம் செய்வர். இங்கு ராமன் தர்ப்பணம் செய்ததாக ஸ்தலவரலாறு உள்ளது. தர்ப்பணம் நடத்தி கொடுக்கும் பண்டிதர்கள் தற்காலிக குடில் அமைத்து அதில் தர்ப்பணம் கொடுப்பர். இதற்கான குத்தகை திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஏலம் மூலம் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை திருவேணி முதல் ஆராட்டுகடவு வரை தர்ப்பண குடில்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் இவை அனைத்தும் தற்போது திருவேணிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் தர்ப்பண குடில்கள் அமைக்கப்படும் இடம் தங்களுக்கு உரியது என்று கூறி வனத்துறை முட்டுக்கட்டையை ஏற்படுத்துகிறது. வரும் சீசனில் இந்த இடங்களில் தர்ப்பண குடில்கள் அமைக்க கூடாது என்று கூறி தேவசம்போர்டுக்கு வனத்துறை சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் மறுத்துள்ளார். 1975ல் தேவசம்போர்டுக்கு தர்ப்பணம் நடத்தும் இடம் குத்தகைக்கு தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பார்க்கிங் மற்றும் பக்தர்களின் தேவைக்கு பயன்படுத்துவதற்காக இது தரப்பட்டுள்ளது. ஆசாரங்களை மீற யாரையும் அனுமதிக்க மாட்டோம். வனத்துறை நோட்டீஸ் தந்துள்ள விபரம் முதல்வர் பினராயி விஜயனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சபரிமலை விவகாரத்தில் வனத்துறைக்கும், தேவசம்போர்டுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. சீசன் தொடங்க உள்ள நிலையில் சீண்டல்களும் தொடங்கி விட்டது.