பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் வேகம்: கார்த்திகையில் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2017 01:09
பழநி, தைப்பூச திருவிழா நடைபெறும் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை கார்த்திகை மாதத்தில் நடத்த திருப்பணிகள் மும்முரமாக நடக்கிறது. பழநி ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயில் பல நுாற்றாண்டுகள் பழமையானது. பாண்டியர், சேரர் கால மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். இக்கோயிலில் கடந்த 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. பழநியில் தைப்பூச திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில்தான் நடக்கிறது. இந்த கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 90லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. இதில் கிரானைட் தளம் அமைத்தல், கோயில் கற்சிலைகள், ஓவியங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து வரும் தைப்பூச விழாவிற்கு முன்னதாக நவம்பர் - டிசம்பரில் (கார்த்திகை மாதம்) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர். இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், “பெரிய நாயகியம்மன் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பெரியநாயகியம்மன் கோயிலில் கார்த்திகை மாதம் கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம். இதுகுறித்து அறநிலையத்துறை ஆணைருக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.