பதிவு செய்த நாள்
05
அக்
2017
11:10
ராமநாதபுரம், ராமநாதபுரம் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. வண்டிக்கார தெரு மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா செப்., 29 ல் முத்துப்பரப்பி, காப்பு கட்டி திருவிழா துவங்கியது. அக்., 1 ல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அக்., 3 ல் மாலை அம்மனின் கரகம் கோயிலில் இருந்து புறப்பட்டு முகவையூரணி மேல்கரையில் கரகம் செம்பு எடுத்து, மேளதாளத்துடன் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தது. இரவு 9:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், பூஜைகள் நடந்தது. நேற்று பொங்கல் வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் மாலை 3:15 மணிக்கு அம்மனின் முளைப்பாரி எடுத்து வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நொச்சிவயல் ஊரணியில் அம்மன் கரகம், முளைப்பாரி கரைக்கப்பட்டது. இதற்கான
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
* முதுகுளத்துார் அருகே புளியங்குடி முப்பிடாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கண்மாயில் கரைக்கப்பட்டது. இரவு நாடகம் நடந்தது. பூக்குளத்தில் தம்புராட்டியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா கிராம தலைவர் காயாம்பூ சின்ன மிராசு தலைமையில் நடந்தது. பூக்குளத்திலிருந்து இளஞ்செம்பூர் தம்புராட்டியம்மன் கோயில் வரை தவளம்பிள்ளை, பால்குடம் ஊர்வலம் நடந்தது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்து, முளைப்பாரி பூக்குளம் கண்மாயில் கரைக்கப்பட்டது.
கீரனுார் அரியநாச்சியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. பொதுமக்கள் பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலமாக பிள்ளையார், இருளப்பசாமி, அரியநாச்சியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தபட்டு, கண்மாயில் கரைக்கபட்டது. ஏனாதியில் அரியநாச்சியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கண்மாயில் கரைப்பட்டது. நிகழ்ச்சியில் முதுகுளத்துார் நகர காங்., கமிட்டி தலைவர் சுரேஷ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர். கிடாத்திருக்கையில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வைத்து முளைப்பாரி திருவிழா கொண்டாடபட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.