பதிவு செய்த நாள்
06
அக்
2017
11:10
கீழக்கரை, திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடற்கரை மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. சேதுக்கரை கடற்கரையில் மகாளய, தை, ஆடி ஆமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை நிறைவேற்றி விட்டு கடற்கரை முன்புறம் அமைந்துள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் வழிபாடு செய்வார்கள். கடலில் நீராடுவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த படித்துறையின் படிக்கட்டுகள் கடந்த 2014 ஆண்டு அப்புறப்படுத்தப்பட்டு, கட்டட கழிவுகளை அப்படியே பக்தர்கள் புனித நீராடும் கடற்கரையோரப்பகுதியில் கொட்டி வைத்திருந்தனர். இதனால் பக்தர்கள் கடலில் கோயிலுக்கு எதிரில் இடத்தில் நீராட முடியாமல் கிழக்குப்பகுதியில் 50 அடி துாரம் தள்ளி நீராடி வருகின்றனர். திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் இருந்து பங்குனி, சித்திரை மாதங்களில் உற்சவர் சுவாமிகளுக்கு சேதுக்கரை கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைகள் மற்றும் ஜீயர் சுவாமிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் நீராடுவதற்கு பெரிதும் பயன்பட்ட படித்துறை இல்லாமல் இருந்து வருவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
திருப்புல்லாணி யூனியன் மூலமாக ரூ. 9 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பணிகளுக்காக ஜல்லிகள், மணல் குவிக்கப்பட்டு இரண்டாண்டிற்கு மேல் ஆனது. டெண்டர் விடப்பட்டும் பணிகள் முடிக்கப்படாததால், அத்தொகை மீண்டும் அரசுக்கே சென்று விட்டது. இதுகுறித்த செய்தி கடந்த மே மாதம் தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் நடராஜன், சுற்றுலாத்துறையின் உயரதிகாரிகள் பார்வையிட்டு, பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். துறைசார்ந்த அலுவலர் ஒருவர் கூறுகையில், பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏற்ற வகையில் ரூ.25 லட்சம் செலவில் படித்துறையும், பெண்கள் உடைமாற்றும் அறை ரூ.10 லட்சத்திற்கும், யாத்ரீகர்கள் ஓய்வு அறை ரூ.27 லட்சத்திற்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தீவிரமாக நடந்து வருகிறது. கடலின் சீற்றத்தினால் படித்துறைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் சல்பேட் சிமென்ட் கலவை சேர்க்கப்படுகிறது, என்றார்.