பதிவு செய்த நாள்
06
அக்
2017
12:10
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்காததால், பாழடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோவிலுார் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். விஸ்தாரமான நான்குமாட வீதி‚ நிலத்தடி நீரை பராமரிக்க தெப்பக்குளம்‚ தீர்த்தகுளம்‚ இதற்கு தண்ணீர் வருவதற்கு பெரிய ஏரியில் இருந்து பாதாள கால்வாய்‚ நகரை எட்டுதிக்கும் பரைசாற்ற ஓங்கி உயர்ந்த கோபுரங்கள். இதற்கு மத்தியில் வைணவத்தை போற்றும் உலகளந்த பெருமாள் கோவில். இதன்மூலம் புராதான நகரம் என்ற தனிச்சிறப்பை பெற்றுள்ளது. அதற்காக தொல்லியல் துறையும் அகழாய்வு செய்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாதாள கால்வாய் மூலம் நகரின் சாக்கடை நீர் வெளியேற்றப்பட்டது குறித்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இத்தனை பெருமை மிக்க திருக்கோவிலுார் நகரில், மையமண்டபத்துடன் கூடிய அழகிய தெப்பக்குளம், இன்று சீரழிந்து கிடக்கிறது. புராதான நகர மேம்பாட்டு நிதியில் மறைந்த முதல்வர் ஜெ.‚ ஆட்சியில் இருந்தபோது, குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். குளத்தில் இருந்து மண்ணை பல மீட்டர் ஆழத்திற்கு விதிமுறைகளுக்கு புறம்பாக அள்ளியதுடன் பணி நிறைவடைந்தது. இதனால் குளம் மேலும் பலமிழந்தது. குளத்திற்கு வரும் பாதாள கால்வாய் ஆக்கிரமிப்பாளர்களால் அடைக்கப்பட்டு, கடந்த 7 ஆண்டகளாக குளத்திற்கு சொட்டு தண்ணீர்கூட வருவது நின்றுபோனது. இதனால் வற்றாத தெப்பக்குளம்‚ வறண்டு‚ பொலிவிழந்து‚ கழிவுகள் கொட்டும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தாண்டு நகரில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து‚ வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டனர் மக்கள். எத்தனை பாடங்கள் கற்று கொடுத்தாலும் இந்த அரசும்‚ மக்களும் கற்றுக்கொள்ள தயாரில்லை என்பதையே காட்டுகிறது, தெப்பக்குளத்தின் இன்றைய நிலை.
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில்‚ பேரூராட்சி நிர்வாகம், ஏரியில் இருந்து குளத்திற்கு வரும் பாதாள கால்வாயை சீரமைத்து, குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குளம் சீரமைப்பு என்ற பெயரில் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு‚ குளத்தை பாழடித்ததுடன், பணி முடிந்துதவிட்டதாக அதிகாரிகள் ஒதுங்கிக் கொண்டனர். தமிழகம் முழுவதும் குளங்கள் துார்வாரப்பட்ட நிலையில்‚ இந்த குளம்மட்டும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. அதற்கும் காரணம் உண்டு‚ இதில் ஒருதுளி மண்கூட இனி எடுக்க முடியாது. அதனால் குளத்தில் உள்ள குப்பையை அகற்றி‚ தண்ணீர் வருவதற்கான பாதாள கால்வாயை சீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. குளத்திற்கு ஏரியில் இருந்து தண்ணீர் வந்தால் மட்டுமே நிரம்பும். தவறும்பட்சத்தில், குளம் எத்தனை மழை பெய்தாலும் வறண்டே கிடக்கும். ஏரியில் இருந்து வரும் பாதாள கால்வாயை உடனடியாக சீரமைத்து, எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின்போது, குளத்தில் தண்ணீர் நிரம்ப மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.