பதிவு செய்த நாள்
06
அக்
2017
01:10
சென்னை : உள்ளகரத்தில், நான்கு நாள், பாகவத நாம சங்கீர்த்தன மேளா, நேற்று கோலாகலமாக துவங்கியது. சென்னை, நங்கநல்லுார், நாகராஜ பாகவதர் பஜன் சேவா மண்டலி மற்றும் திருவல்லிக்கேணி, பாண்டுரங்க பஜன் மண்டலி இணைந்து, பாகவத நாம சங்கீர்த்தன மேளாவுக்கு ஏற்பாடு செய்தன.அதன்படி, உள்ளகரம்,திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள, எஸ்.ஆர்.கே., மகாலில் நேற்று அதிகாலை, கணபதி ஹோமத்துடன், விழா துவங்கியது. காலை, 7:00 மணிக்கு, விஷ்ணு சகஸ்ரநாம பக்த ஜன சபா சார்பில், சகஸ்ரநாமம் நடந்தது. அதை தொடர்ந்து, ஸ்ரீமதி, கல்யாணி மார்கபந்து பாகவதர் குழுவினரின் தோடய மங்களம், குரு கீர்த்தனை நடந்தது.காலை, 9:30 மணிக்கு, ஈரோடு சத்யநாராயண பாகவதரின், யோகிராம் சுரத்குமார் கீர்த்தனைகள், அஷ்டபதி நடந்தது.
நேற்று மாலை, 5:00 மணிக்கு, டோல்கி ரமணன், கோகுல் பாகவதரின், அபங்கம் அரங்கேறியது. இதை தொடர்ந்து, மாணவர்களின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, கிருஷ்ண பிரேமி யின், பிரவசனம் அரங்கேறியது. திவ்யநாமம், டோலோச்சவத்துடன், முதல் நாள் நிகழ்ச்சி நிறைவடைந்தது.வரும், அக்., 8 வரை நடக்கும் இந்த வைபவத்தில், ஆறாவது சத்குரு பீடாதிபதி, மருதாநல்லுார் கோதண்டராம சுவாமி பங்கேற்று, அருளாசி வழங்குகிறார். விழாவின் கடைசி நாள், உஞ்சவிருத்தி நடக்கிறது. இது குறித்து, நாகராஜ பாகவதர் பஜன் சேவா மண்டலியினர் தரப்பில் கூறியதாவது: நான்கு நாட்கள் நடக்கும், நாம சங்கீர்த்தன வைபவத்தில், இலவச மருத்துவ முகாம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, திருமண உதவி வழங்கப்பட உள்ளன. மேலும், மேளா நடக்கும் அனைத்து நாட்களிலும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கூறினார்.