பதிவு செய்த நாள்
19
அக்
2017
12:10
ரட்லம்: மத்திய பிரதேசத்தில், தீபாவளியை முன்னிட்டு, கோவில் ஒன்றில், மஹாலட்சுமிக்கு, 100 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ம.பி., மஹாலட்சுமிக்கு, ரூ.100 கோடி, கரன்சி, அலங்காரம் மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ரட்லம் மாவட்டத்தில், மஹாலட்சுமி கோவில் உள்ளது.இந்த கோவிலில், மஹாலட்சுமிக்கு, தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படு கிறது. பக்தர்கள் தரும் பணம், நகை போன்றவற்றை கொண்டே, சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மஹாலட்சுமியின், தீபாவளி அலங்காரத்தில் பங்கேற்றால், தங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என, அம்மாநில மக்கள் நம்புகின்றனர்.இதனால், தீபாவளியன்று, கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது .மஹாலட்சுமிக்கு அலங்காரம் செய்ய, பணமாகவோ, நகையாகவோ, கோவில் தலைமை பூஜாரியிடம், பக்தர்கள் முன் கூட்டியே வழங்கி விடுகின்றனர்.பக்தரின் பெயரையும், அவர் தரும் பொருளையும், நோட்டு புத்தகத்தில், அவர் எழுதி வைக்கிறார்.
வட மாநிலங்களில், தீபாவளி பண்டிகை, ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஐந்து நாட்களும்,. மஹாலட்சுமிக்கு, பக்தர்கள் தரும் நகைகள், பணத்தால் அலங்காரம் செய்யப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு பின்,பக்தர்களிடமே பணம், நகைகளை, பூஜாரி திருப்பி தந்து விடுகிறார். அதை வீட்டில் வைத்தால், செல்வம் பெருகும் என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டு, மஹாலட்சுமிக்கு, அலங்காரம் செய்ய, நூறு கோடி ரூபாய் மதிப்புக்கு, கரன்சி நோட்டுகளையும், நகைகளையும், பக்தர்கள் தந்துள்ளனர். இதனால், கருவறை முழுவதும், நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி கோவில் தலைமை பூஜாரி கூறுகையில், தீபாவளியை முன்னிட்டு, பக்தர்கள் தரும் பணம், நகைகளை, வைக்க, கோவிலில் இடமில்லை. எனினும் இதுவரை, கோவிலில் ஓரு சிறிய பொருள் கூட திருட்டு போனது இல்லை; பக்தர்களிடம் திருப்பி கொடுப்பதிலும், தவறு நடந்ததில்லை என்றார்.