பதிவு செய்த நாள்
19
அக்
2017
12:10
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா...: பிள்ளைகளின் திருமணத்தை காலாகாலத்தில் நடத்த பெற்றவர்கள் விரும்புவர். பருவத்தே பயிர் செய் என்பது விவசாயத்தைப் போலவே, மணவாழ்விற்கும் பொருந்தும். இதை சுபஸ்ய சீக்கிரம் என்கிறது சாஸ்திரம். இதற்காக பெற்றோர் பிள்ளைகளின் ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டி, குருபார்வை வந்தாச்சா வியாழ நோக்கம் சீக்கிரம் வருமா என்றெல்லாம் கேட்பர். ஒருவரின் பிறந்த ராசி, லக்னத்திற்கு குருபகவானின் சுபபார்வை உண்டாகும் போது திருமணம் இனிதே நடந்தேறும். அதற்குரிய சுபமாதமாக ஐப்பசி இருக்கிறது. இதில் அக்.27, 30, நவ.1, 2, 9 நாட்களில் முகூர்த்தங்கள் வரவிருக்கின்றன.
அள்ளித் தரும் வெள்ளி முருகனுக்குரிய கிழமைகள்
செவ்வாய், வெள்ளி. இதில் வெள்ளியன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் வெற்றி, செல்வ வளம், உடல்நலம் உண்டாகும். இதனை ஐப்பசி முதல் வெள்ளிக்கிழமை(அக்.20) தொடங்கி வாரம் தோறும் மூன்று ஆண்டு மேற்கொள்ள வேண்டும். இதனை கந்த சுக்கிர வார விரதம் என குறிப்பிடுவர். வெள்ளியன்று காலையில் நீராடி முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதம் மேற்கொள்ள வேண்டும். ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம், ஸ்கந்த குருகவசம் பாடல்களைப் படிப்பது நல்லது. பார்க்கவ முனிவரின் ஆலோசனைப்படி மூன்றாண்டு வெள்ளிக்கிழமை விரதமிருந்த பகீரதன் இழந்த ஐஸ்வர்யத்தை பெற்றான்.
தீர்க்க சுமங்கலி பவ!
தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெற ஐப்பசி அமாவாசையான இன்று(அக்.19) பெண்கள் இருப்பது கேதார கவுரி விரதம். நிறை கும்பத்தில் தேங்காய், மாவிலை, பூக்களால் அலங்கரித்து, அதில் சாம்பமூர்த்தியான சிவபெருமானை எழுந்தருளச் செய்து வழிபடுவர். பெண்கள் தங்களின் வலது கையில் 21 முடிச்சிட்ட மஞ்சள் கயிறை நோன்புக்காக கட்டிக் கொள்வர். பழவகைகள், பலகாரங்கள் ஆகியவற்றையும் 21 என்ற எண்ணிக்கையில் படைப்பர். பார்வதி மேற்கொள்ளும் விரதம் என்பதால் கேதாரகவுரி என பெயர் வந்தது. இதன் பலனாக பார்வதி சிவனின் உடம்பில் இடப்பாகம் பெற்றாள். சுமங்கலி பாக்கியம் பெற இதனை மேற்கொள்வர்.
புதுவீடு கட்ட ஆசையா
விரைவில் புதுமனை விழா நடத்த விரும்புபவர்கள் ஐப்பசி வாஸ்து நாளை (அக்.28) தேர்ந்தெடுப்பது சிறப்பு. இந்நாளில் காலை 7:44 - 8:20 மணிக்கு பூமி பூஜை நடத்த வேண்டும். சூரியனை ஆதாரமாக விளங்கும் பூலோகத்தில் உயிரற்ற ஜடப்பொருள்களான செங்கல், சிமென்ட், மணல், கம்பிகள், மரம் போன்ற வஸ்துகளை (பொருட்களை) சரியான விகிதத்தில் கலந்து பூமி மீது கட்டடமாக எழுப்பி உயிரோட்டம் கொடுப்பதே வாஸ்து. இதற்கான ஆன்மிக ரீதியான காரணம் மத்ஸ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தகாசுரனுடன் போரிட்ட சிவபெருமான் வெற்றியடைந்தார். அப்போது அவரது நெற்றியில் உள்ள வியர்வை பூமியில் சிந்த, அதிலிருந்து பூதம் ஒன்று கிளம்பியது. பசியால் வாடிய பூதத்திற்கு உணவு தேவைப்பட்டது. அதற்குரியதை வழங்க பிரம்மா இந்த வழிபாட்டு முறையை உருவாக்கினார். இதன்படி, புதிதாக வீடு கட்டுபவர்கள், வாஸ்து நாளில் நடத்தும் பூஜைப்பொருளை வாஸ்து புருஷன் ஏற்றுக் கொண்டார். வாஸ்துபூஜையன்று வீடு கட்டுவதற்கான செங்கல், சிமென்ட், மணல், கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் வாங்க விரைவில் கிரகப்பிரவேசம் நடத்தும் பாக்கியம் உண்டாகும்.
ஐஸ்வர்யம் தரும் அட்சயநவமி
செல்வ வளம் பெருகச் செய்யும் அட்சயதிரிதியை போல அட்சயநவமியும் (அக்.29) பொன்னான நாள். இந்நாளில் செய்யும் நற்செயலோ அல்லது வாங்கும் பொருளோ பன்மடங்காக பெருகும் என்பது ஐதீகம். இந்நாளில் லட்சுமி குபேரரை வழிபடுவது நல்லது. கிருஷ்ணர் அவதரித்த துவாபர யுகத்தின் தொடக்க நாளாக இது கருதப்படுகிறது. குஷ்மந்தன் என்னும் அரக்கனை விஷ்ணு வதம் செய்ததால் இந்நாளுக்கு குஷ்மந்த நவமி என்றும் பெயருண்டு. இந்நாளில் நெல்லி மரத்தை வழிபட லட்சுமியின் அருள் கிடைக்கும். அட்சய திரிதியை போல இந்நாளில் தங்க ஆபரணங்கள், மணமகளுக்குரிய முகூர்த்தப்பட்டு, ஜவுளிப்பொருட்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், மரச்சாமான்கள், பைக், கார் போன்ற புதிய வாகனங்கள் வாங்கினால் லட்சுமியின் அருளால் ஐஸ்வர்யம் பெருகும்.